பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பெங்களூர் போலீஸ் கமிஷனர் மாற்றம்: உள்துறை அமைச்சரை நீக்க சோனியா ஒப்புதல்?

பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பெங்களூர் போலீஸ் கமிஷனர் மாற்றம்: உள்துறை அமைச்சரை நீக்க சோனியா ஒப்புதல்?
Updated on
1 min read

பெங்களூரில் 6 வயது சிறுமி பள்ளியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் ராகவேந்திரா அவ்ராத்கர் திங்கள்கிழமை அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த ஒரு வாரத்தில் பெங்களூரில் கல்லூரி மாணவி, கன்னியாஸ்திரி, ஆசிரியை உள்பட 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் 6 வயது சிறுமி அவர் படித்த பள்ளியில் ஸ்கேட்டிங் பயிற்றுநரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கடந்த 6 நாட்களாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெற்றோர்கள்,மாணவ அமைப்பினர், சமூக நல அமைப்புகள் மற்றும் எதிர்க்கட்சி யினர் கர்நாடகத்தின் பல பகுதி களில் தொடர் போராட்டத்தில் குதித்தனர். கர்நாடக முதல்வரின் வீடு, காவல் துறை ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களையும் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

2 கமிஷனர்களும் மாற்றம்

கர்நாடக அரசுக்கு ஏற்பட்ட தொடர் நெருக்கடியின் காரண மாக பெங்களூர் மாநகர காவல் துறை ஆணையர் ராகவேந்திரா அவ்ராத்கரை பணியிட மாற்றம் செய்வது குறித்து, கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், முதல்வர் சித்தரா மையாவுடன் திங்கள் கிழமை காலை ஆலோசனை செய்தார்.

அதனைத் தொடர்ந்து பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் ராகவேந்திரா அவ்ராத்கர் மற்றும் இணை ஆணையர் கமல் பந்த் ஆகிய இருவரையும் பணியிட மாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.பெங்களூர் மாநகரின் கூடுதல் இயக்குநரான(சட்டம்,ஒழுங்கு) எம்.என்.ரெட்டி புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கே.ஜே.ஜார்ஜ் நீக்கம்?

சமீப காலமாக அதிகரித்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங் களால் கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸ் அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.இதனை சமாளிக்க தற்போது உள்துறை அமைச்சராக இருக்கும் கே.ஜே.ஜார்ஜிடமிருந்து அப் பதவியைப் பறிக்க சித்தராமையா திட்டமிட்டு இருப்ப‌தாக கூறப்படுகிறது.

பெங்களூரில் சட்டம்- ஒழுங்கை பராமரிக்கத் தெரியாத உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் பதவி விலக வேண்டும் என கர்நாடக முழுவதும் எதிர்க் கட்சியான பா.ஜ.க. தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் அரசு மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக உள்துறை அமைச்சர் பதவியை அவரிடம் இருந்து பறிப்பது குறித்து சித்தராமையா, காங்கிரஸ் மேலிடத்திடம் ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்திருப் பதாக கர்நாடக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாட்களில் கே.ஜே.ஜார்ஜ் உள்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in