

உத்தரப் பிரதேச சட்டப் பேரவையில் 403 உறுப்பினர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் வெள்ளி விழா சமீபத்தில் நடந்தது. இதில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத், பிஹார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், காங்கிரஸ் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
அப்போது, பிஹார் தேர்தலைப் போலவே உத்தரப் பிரதேச தேர்தலிலும் ஒன்று சேர்ந்து பாஜக.வை விரட்டுவோம் என்று லாலு கூறினார். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங்கை ஜனதா பரிவார் தலைவர்கள், காங்கிரஸ் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த கிஷோர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், ‘‘உ.பி. தேர்தலில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை. தேர்தலில் சமாஜ்வாதி கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும். எனினும், கட்சிகள் இணைப்பு வேண்டுமானால் நடைபெறலாம்’’ என்று முலாயம் சிங் நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஜனதா பரிவார் தலைவர்கள் சந்திப்பு நடந்த வேளையில் நேற்று அவசர அவசரமாக பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த முலாயம், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இதன்மூலம் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு முலாயம் சிங் முற்றுப்புள்ளி வைத் துள்ளார்.