

வதோதரா: குஜராத் மாநிலம் வதோதராவில் சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
டாடா நிறுவனமும், ஏர்பஸ் நிறுவனமும் இணைந்து சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலையை குஜராத் மாநிலம் வதோதராவில் அமைக்க உள்ளன. தனியார் துறைக்கு சொந்தமான நாட்டின் முதல் ராணுவ விமானத் தயாரிப்பு நிறுவனமான இதற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று ( ஞாயிற்றுக்கிழமை ) அடிக்கல் நாட்டினார்.
இந்திய விமானப்படையின் அவ்ரோ-748 ரக விமானங்கள் மிகவும் பழமையானதாக ஆகிவிட்டதால், ஐரோப்பிய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனமான ஏர் பஸ்சின் சி-295 ரக ராணுவ போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்ய இந்தியா திட்டமிட்டது. இதற்காக கடந்த ஆண்டு ஏர்பஸ் நிறுவனத்துடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன்படி, 56 சி-295 ரக விமானங்கள் ரூ.21,935 கோடி செலவில் வாங்கப்படுகின்றன.
இவற்றில், 4 ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் நாட்டில் உள்ள தங்களது தொழிற்சாலையில் 16 விமானங்களை தயாரித்து, இந்தியாவிடம் ஏர்பஸ் ஒப்படைக்க வேண்டும். மீதி 40 விமானங்களை, இந்தியாவில் உள்ள டாடா கன்சார்ட்டியம் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து ஒப்படைக்க வேண்டும். இந்த ஒப்பந்தப்படி, குஜராத் மாநிலம் வதோதராவில், சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிப்பதற்கான தொழிற்சாலைக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அடிக்கல் நாட்டு நிகழ்வில் பிரதமர் மோடி பேசும்போது, “உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். போர் விமானங்களையும் பீரங்கி டாங்கிகளையும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இந்தியா தயாரித்து வருகிறது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகளும் தடுப்பூசிகளும் இன்று உலகில் லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றுகின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், போன்கள், கார்கள் ஆகியவை உலகின் பல நாடுகளிலும் பரவியுள்ளன. மேக் இன் இந்தியா , மேக் ஃபார் தி குளோப் மூலம் இந்தியா அதன் திறன்களை அதிகரித்து வருகிறது .
இனி போக்குவரத்து விமானங்களை உற்பத்தி செய்யும் நாடாகவும் இந்தியா இருக்கப் போகிறது. பயணிகள் விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் காலத்தையும் நாம் பார்க்க இருக்கிறோம். அதில் இது இந்தியாவில் உருவாக்கப்பட்டது என்று செதுக்கப்பட்டிருக்கும்.
இன்று வதோதராவில் தொடங்கப்பட்டுள்ள இந்த தொழிற்சாலை இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித் துறைகளை மாற்றியமைக்கும் வல்லமை கொண்டது. நாட்டின் பாதுகாப்பு விண்வெளித் துறையில் இவ்வளவு பெரிய முதலீடு செய்யப்படுவது இதுவே முதல்முறை” என்றார்.