Last Updated : 22 Nov, 2016 06:07 PM

 

Published : 22 Nov 2016 06:07 PM
Last Updated : 22 Nov 2016 06:07 PM

பணத்திற்காக அல்லல் படும் மக்களுக்கு தேசப்பற்று பாடம் நடத்தாதீர்கள்: பாஜக மீது சிவசேனா பாய்ச்சல்

ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து கடும் விமர்சனம் வைத்துள்ள சிவசேனா கட்சி, பாஜக-வினர் தங்கள் வசதிக்கேற்ப யார் தேசப்பற்றுள்ளவர்கள் யார் தேச துரோகிகள் என்று முத்திரை குத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளது.

மேலும் ரூ.500, 1000 நடவடிக்கையினால் மட்டும் பயங்கரவாதத்தை ஒழித்து விட முடியும் என்றால் ஒட்டுமொத்த உலக நாடுகளும் இத்தகைய நடவடிக்கையை எடுத்திருப்பார்கள் எனவே கொஞ்சம் வரம்புடன் உரிமை கோருங்கள் என்று கூறியுள்ளது சிவசேனா.

பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த உத்தவ் தாக்கரே கூறியதாவது:

“பணத்திற்காக கவலையுடன் வரிசையில் அமைதியாகக் காத்திருக்கும் மக்களுக்கு எது தேசப்பற்று என்பது பற்றி நீங்கள் பாடம் எடுக்க வேண்டாம். இவர்களது கடின உழைப்புப் பணம் நாட்டின் அனைத்துப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே உங்கள் கற்பனைக்கேற்ற வசதிக்காக யார் தேசப்பற்றுடையவர்கள் யார் தேச விரோதிஅக்ள் என்று நீங்கள் முத்திரை குத்த தேவையில்லை.

மாவட்ட கூட்டுறவு வங்கிகள் செயல்பட அனுமதிக்க மாட்டீர்கள் ஆனால் இஸ்லாமியர்களுக்காக வட்டியில்லா வங்கி நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிப்பீர்கள்.

நம் நாடு எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

நோட்டுகளை தடை செய்தால் பயங்கரவாதம் ஒழியும் என்றால் உலகின் ஒட்டுமொத்த நாடுகளும் இதனை கடைபிடித்திருப்பார்களே! எனவே இவர்கள் கூறிக்கொள்வதற்கெல்லாம் ஒரு வரம்பு இல்லையா?” என்றார் உத்தவ் தாக்கரே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x