Published : 23 Jul 2014 03:25 PM
Last Updated : 23 Jul 2014 03:25 PM

நோன்பு இருந்தவரிடம் உணவு திணிப்பு: சிவசேனை எம்.பி.க்கள் மீதான புகாரால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி

ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனை கட்சி எம்.பி.,க்கள் மீதான புகார் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.

டெல்லியில் உள்ள மகாராஷ்டிர மாநில இல்லத்தில் ஐ.ஆர்.சி.டி.சி. உணவு வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிரா சதானுக்கு வந்த சிவசேனை எம்.பி.,க்கள் 11 பேர், தங்களுக்கு சாப்பிட மகாராஷ்டிர மாநில பாரம்பரிய உணவு வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் பணியில் இருந்த ஊழியர்கள் அவர்களுக்கு சப்பாத்தியை பரிமாறியுள்ளனர். இதனால் சிவசேனை கட்சி எம்.பி.க்கள் கோபத்தில் மேற்பார்வையாளரை வலுக்கட்டாயமாக சப்பாத்தியை சாப்பிட வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. அந்த மேற்பார்வையாளர் ஒரு முஸ்லிம். அவர் ரம்ஜான் நோன்பு மேற்கொண்டிருந்தார் என கூறப்படுகிறது.

ரம்ஜான் நோன்பு இருந்த முஸ்லிம் ஒருவரை வற்புறுத்தி சாப்பிட வைத்ததாக சிவசேனை கட்சி எம்.பி.,க்கள் மீதான புகார் குறித்து இன்று மக்களவை, மாநிலங்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். குற்றம்சாட்டப்பட்டுள்ள சிவசேனா எம்.பி.க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரினர். ஆனால், தங்கள் மீதான புகாரை சிவசேனை எம்.பி.க்கள் திட்டவட்டமாக மறுத்தனர்.

இதனால் ஏற்பட்ட அமளி காரணமாக இரு அவைகளும் சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டன. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

மக்களவையில் பூஜ்ய நேரத்தில் இவ்விகாரத்தை எழுப்பிய காங்கிரஸ் எம்.பி. ஷானவாஸ், "இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. மதச்சார்பின்மை என்ற கொள்கைக்கு பங்கம் விளைவிப்பதாக உள்ளது. இச்சம்பவம் மூலம், நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டிய எம்.பி.க்கள் மோசமான அடையாளங்களாக மாறியிருக்கின்றனர்" என பேசினார். மேலும், பாதிக்கப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம் பணியாளர் அர்ஷத்தின் புகாரில் இருந்து சில வாக்கியங்களையும் அவையில் வாசித்துக் காட்டினார்.

இவ்விவகாரம் தொடர்பாக பேசிய நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, "நம்முன் ஒரு உணர்வுப்பூர்வமான விவகாரம் உள்ளது. இதை மையப்படுத்தி மத உணர்வுகளை தூண்டாதீர்கள். உண்மை என்ன என்பது நம் யாருக்குமே தெரியாது. இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பதும் உறுதிபட தெரியவில்லை. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அதுவரை தவறான சமிக்ஞைகளை நாட்டுக்கு நாம் கொடுக்கக் கூடாது. நடந்ததாக கூறப்படும் விவகாரத்திற்கும் அரசுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" என்றார்.

சிவசேனை எம்.பி.க்களுக்கு ஆதரவாக பேசிய மத்திய அமைச்சர் அனந்த் கீதே, ரமலான் மாதத்தை மதிப்பவர்கள் இப்படிப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளை அவையில் முன்வைக்கக் கூடாது என்றார். நரேந்திர மோடி அரசுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் காங்கிரஸ் போலி குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும் அவர் கூறினார்.

இவ்விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உண்மை கண்டறியப்படாத ஒரு விவகாரம் தொடர்பாக அடுத்த கட்ட விவாதத்துக்கு தயாராவது கூடாது. முதலில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படட்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x