பணத்தட்டுப்பாடு பிரச்சினை மேம்பட்டுள்ளது: வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி டெபாசிட்- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

பணத்தட்டுப்பாடு பிரச்சினை மேம்பட்டுள்ளது: வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி டெபாசிட்- உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
Updated on
1 min read

இதுவரை வங்கிகளில் ரூ.6 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ள தாகவும் பணத் தட்டுப்பாடு பிரச்சினை மேம்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 8-ம் தேதி பழைய 500, 1000 செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி பல்வேறு உயர் நீதிமன்றங்கள் மற்றும் இதர நீதி மன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக் களை விசாரிக்க தடை விதிக்கக் கோரியும் அனைத்து மனுக்களை யும் ஒரே நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது.

இந்த மனு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட் மற்றும் எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி ஆஜராகி, “பணத்தட்டுப் பாடு பிரச்சினை இப்போது மேம் பட்டுள்ளது. இதுவரை ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் ரொக்க பரி மாற்றம் 4 சதவீதத்துக்கு மேல் இருக்கக் கூடாது. ஆனால் இது இப்போது 12 சதவீதமாக உள்ளது. இதைக் குறைக்கவே இந்த நடவடிக்கை.

இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை உச்ச நீதிமன்றத்துக்கோ அல்லது ஒரு உயர் நீதிமன்றத்துக்கோ மாற்ற உத்தரவிட வேண்டும்” என்றார்.

இதைக்கேட்ட நீதிபதிகள், “மத்திய அரசின் கோரிக்கை குறித்து பதில் அளிக்குமாறு மனுதாரர் களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. அதேநேரம், பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு தடை விதிக்க முடியாது. இந்த வழக்கு விசாரணை டிசம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது” என்றனர்.

முன்னதாக, இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. அதே நேரம், பணத்தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட் டிருப்பதைச் சுட்டிக்காட்டிய நீதி மன்றம், பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in