

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆசம் கானுக்கு, ராம்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை அடுத்து, அவரது எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது.
2019 பொதுத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத், அப்போதைய ராம்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஞ்சநேய குமார் ஆகியோருக்கு எதிராக ஆசம் கான் அவதூறாகப் பேசியதாக குற்றச்சாட்டு பதியப்பட்டது. வழக்கை விசாரித்த ராம்பூர் நீதிமன்றம் கடந்த 27ம் தேதி தீர்ப்பளித்தது. அதில், இரு தரப்புக்கு இடையே மோதலை உண்டு பண்ணும் நோக்கில் ஆசம் கான் பேசியது உறுதிப்படுத்தப்பட்டதாகவும், எனவே, அவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதிப்பதாகவும் நீதிபதி உத்தரவிட்டார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி மக்கள் பிரதிநிதி ஒருவருக்கு 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் தனது பதவியை இழப்பார். ஆசம் கானுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழந்துவிட்டதாக உத்தரப் பிரதேச சட்டப்பேரவை முதன்மை செயலாளர் பிரதீப் துபே அறிவித்துள்ளார். இதனை அடுத்து ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாகவும் அவர் அறிவித்தார்.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டுகள் அல்லது அதற்கும் அதிகமான காலத்திற்கு தண்டனைக்கு உள்ளாகக் கூடியவர்கள் தண்டனைக் காலம் முடிந்த பிறகு அடுத்து 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே, தற்போதைய நிலையில் ஆசம் கான் 2031 வரை தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆசம் கானின் சட்டப்பேரவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேச துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, ராம்பூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்கு நடைபெறும் இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும்; ராம்பூர் தொகுதியில் தாமரை மலரும் என தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாதி கட்சியில், அதன் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அடுத்த தலைவராக ஆசம் கான் பார்க்கப்படுகிறார். ராம்பூர் மாவட்டத்திலும், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு மாவட்டங்களிலும் ஆசம் கான் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார். 2017ல் உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அவர் மீது நில அபகரிப்பு, ஊழல் என 90க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. நில அபகரிப்பு வழக்கு ஒன்றில் 27 மாதங்கள் சிறையில் இருந்த ஆசம் கானுக்கு கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.