

கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை முக்கிய கட்சிகளாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகாவை ஆட்சி செய்த மஜத தற்போது எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. வரும் 2018-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் இழந்த இடத்தைக் கைப்பற்ற தேவகவுடா வும், முன்னாள் முதல்வர் குமார சாமியும் முடிவு செய்துள்ளனர்.
தேவகவுடா தனது மகன்கள் குமாரசாமி, ரேவண்ணா, மருமகள் அனிதா குமாரசாமி ஆகியோரை வைத்து கட்சியை வளர்ப்பதற்காக பல்வேறு வியூகங்களை வகுத் துள்ளார். அதன்படி தென் கர்நாட காவில் பெங்களூரு ஊரகம், தும்கூரு, மண்டியா, ஹாசன் உள் ளிட்டமாவட்டங்களில் மஜத வலிமையாக இருப்பது போல் வட கர்நாடகாவிலும், ஹைதராபாத் கர்நாடகாவிலும் கட்சியை வலுப்படுத்த வேண்டும். எனவே அந்தப் பகுதிகளில் கட்சி வேலைகளை முடுக்கிவிடுமாறு குமாரசாமிக்கு ஆணையிட்டார்.
இதையடுத்து குமாரசாமி பெங்களூருவில் இருந்து ஹூப்ளி மற்றும் ஹைதராபாத் கர்நாடகா பகுதிகளில் குடியேற முடிவு செய்தார். இதன்படி வட கர்நாடகாவில் மையப் பகுதியான ஹூப்ளியில் புதிய வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். இதன் புதுமனை புகு சிறப்பு பூஜை நேற்று தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த பூஜையில் குமாரசாமியும், அவரது மனைவி அனிதாவும் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, “வட கர்நாடகத்தில் கட்சியைப் பலப்படுத்தும் நோக்கில் ஹூப்ளிக்கு குடியேறியுள்ளேன். மாதத்துக்கு 13 நாட்கள் இந்த வீட்டில் தங்கி, வட கர்நாடகாவில் கட்சிக் கூட்டங்களில் பங்கேற்பேன். இதன் மூலம் வட கர்நாடகாவில் 40 தொகுதிகளில் மஜத-வை வெற்றி பெறச் செய்வேன். இதே போல ஹைதராபாத் கர்நாடக பகுதிகளிலும் சில நாட்கள் தங்க திட்டமிட்டுள்ளேன். தேவைப் பட்டால் வட கர்நாடகாவில் போட்டியிட்டு வெற்றிப்பெற்று, சட்டப்பேரவைக்குள் நுழைவேன்” என்றார்.
ஹூப்ளியில் நேற்று நடைபெற்ற புதுமனை புகு சிறப்பு பூஜையில் குமாரசாமி, அவரது மனைவி அனிதா பங்கேற்றனர்.