

புதுடெல்லி: “தீவிரவாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்களாக சமூக ஊடகங்கள் உள்ளன” என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா தீவிரவாத தடுப்புக் குழுவின் இரண்டாம் நாள் சிறப்பு அமர்வு புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேசியதாவது: “இணையதளமும் சமூக ஊடகங்களும் தீவிரவாதிகள் பயன்படுத்தும் முக்கிய ஆயுதங்களாக உள்ளன. சமூகப் பிளவை ஏற்படுத்தும் நோக்கில் பொய் பிரச்சாரம் செய்வது, சர்ச்சையை ஏற்படுத்துவது போன்ற வேலைகளை செய்வதற்கு தீவிரவாதிகள் இணையதளத்தையும், சமூக ஊடகங்களையும் நேர்த்தியாக பயன்படுத்தி வருகிறார்கள்.
தீவிரவாதிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒற்றை ஓநாய்கள் எனும் தனி நபர்களே வெளிப்படையான சுதந்திரமான சமூகங்கள் மீது தாக்குதலை நடத்த போதுமானவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், அவர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் தொழில்நுட்ப உதவியுடன் பெற்றுவிடுகிறார்கள். சுதந்திரத்திற்கு எதிராகவும், சகிப்புத்தன்மைக்கு எதிராகவும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தொழில்நுட்பங்களை வெகு நேர்த்தியாக பயன்படுத்துகிறார்கள்.
தீவிரவாத தடுப்புக்கான ஐ.நா நிதியத்திற்கு இந்தியா இந்த ஆண்டு 5 லட்சம் அமெரிக்க டாலர் நிதி உதவி அளிக்க இருக்கிறது. தீவிரவாத தடுப்புக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்த உறுப்பு நாடுகளுக்கு இந்த நிதி வழங்கப்படும். கடந்த 20 ஆண்டுகளில் தீவிரவாத தடுப்புக்கான கட்டமைப்புகளை வலுப்படுத்த ஐ.நா தொடர்ந்து முயன்று வருகிறது. ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலுமே தீவிரவாதம் வளர்ந்து வருகிறது” என்று அவர் பேசினார்.