

அகமதாபாத்: குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பமும் மாதம் 27,000 ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், பஞ்சமஹாலில் வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் ஆம் ஆத்மியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் டெல்லியின் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது பேசிய கேஜ்ரிவால், "குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பமும் மாதம் ரூ.3,000 ஆயிரம் மின்சார செலவு, ரூ.10,000 கல்விக்கான செலவு, ரூ.5,000 சுகாதாரத்துக்கான செலவுகளை சேமிக்க முடியும்.
உங்கள் மாதந்தாந்திர மின்சாரக்கட்டணம் ரூ3,000 வருகிறது என்றால் இனி அது பூஜ்யமாக மாறும் நீங்கள் மாதம் 3,000 வரை சேமிக்க முடியும். இனி உங்கள் குழந்தைகளை படிக்க வைக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது. அவர்களுக்கான கல்விக்கட்டணம், புத்தகச் செலவுகள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியத் தேவையில்லை. இனி அவை என்னுடைய பொறுப்பு. டெல்லியில் நாங்கள் உலகத்தரம் வாய்ந்த பள்ளிகளை உருவாக்கி இருக்கிறோம். அங்கு பணக்கார வீட்டு குழந்தைகளும் ஏழை வீட்டுக்குழந்தைகளும் ஒன்றாக அமர்ந்து படிக்கிறார்கள். நீதிபதி வீட்டுக் குழந்தைகள், ஐஏஎஸ் அதிகாரிகள் வீட்டுக் குழந்தைகள், ரிக்ஷாவாலா வீட்டுக்குழந்தைகள் என எல்லோரும் ஒரே பெஞ்சில் உட்கார்ந்து படிக்கிறார்கள். டெல்லியில் தொழிலாளர்களின் குழந்தைகளும் ஐஏஎஸ், ஐபிஎஸ், மருத்துவம், பொறியியல் படிக்கிறார்கள். டெல்லியில் உருவாக்கியதைப் போன்ற பள்ளிகளை குஜராத்திலும் உருவாக்க நான் திட்டம் வைத்துள்ளேன்.
உங்கள் வீட்டில் 3 குழந்தைகள் இருந்தால், நீங்கள் மாதம் 10,000 வரை கல்விக்கட்டணம் சேமிக்க முடியும். யாருக்காவது உங்கள் குடும்பத்தில் உடல்நிலை சரி இல்லை என்றால் அவர்களின் மருத்துவ செலவு குறித்து கவலைப்பட வேண்டாம் அதனை கேஜ்ரிவால் பார்த்துக்கொள்வேன். டெல்லியில் அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
பெண்களுக்கு பணம் வழங்குவது குறித்து பாஜக என்மீது பல அவதூறுகளைப் பரப்பி வருகிறது. உங்களுக்கு அதில் என்ன பிரச்சினை. ஒரு குடும்பத்தில் இரண்டு பெண்கள் இருந்தால், அவர்களுக்கு 2 ஆயிரம் கிடைக்கும். மூன்று பெண்கள் இருந்தால் 3 ஆயிரம் கிடைக்கும். நீங்கள், மின்சார கட்டணம் 3 ஆயிரம், கல்விக்கட்டணம், 10 ஆயிரம், மருத்துவக் கட்டணமாக 5 ஆயிரம் வரை சேமிக்க முடியும். இது தவிர வேலைவாய்ப்பின்மையை போக்க திட்டமிட்டுள்ளோம். வேலைாயில்லாத நபருக்கு வேலை கிடைக்கும் வரை, மாதம் 3 ஆயிரம் வழங்கப்படும். ஒரு வீட்டில் 2 வேலையில்லாத நபர்கள் இருந்தால் அவர்கள் ரூ.6,000 மாதம் பெறுவார்கள்". இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்.
குஜராத்தை குறிவைக்கும் கேஜ்ரிவால்: விரைவில் குரஜாத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி குஜராத்தில் ஆட்சியை பிடிக்க தீவிரமாக முயன்று வருகிறது. குஜராத்தில் காங்கிரஸ் 64 இடங்களையும், பாஜக 111 இடங்களையும் கைவசம் வைத்திருக்கும் நிலையில், புதிய மாற்றாக வர ஆம் ஆத்மி கட்சி தீவிரம் காட்டி வருகிறது.
அரவிந்த் கேஜ்ரிவால் ஏற்கெனவே, 300 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லாதவர்களுக்கு ரூ.3000 உதவித் தொகை, 10 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள், சர்பஞ்களுக்கு மாதம் ரூ. 10,000 ஊதியம் 18 வயதிற்கு மேல் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை, விவசாயக்கடன் தள்ளுபடி என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.