

அவுரங்காபாத்: பிஹார் மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவுரங்காபாத்தில் உள்ள கடை ஒன்றில் சத் பூஜைக்கான பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தபோது, அதிகாலை 2.30 மணிக்கு இந்த துயரசம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ஷாகஞ்ச் நகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து நடந்த குடும்பத்தைச் சேர்ந்த அனில் கோஸ்வாமி என்பவர் சத் பூஜைக்காக பிரசாதம் தயார் செய்து கொண்டிருந்தார். அப்போது கேஸ் சிலிண்டர் ஒன்று தீ பிடித்து எரிந்ததது. அதனைத் தொடர்ந்து அந்தத் தீ பெரும் வெடிப்பாக மாறியதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து கேள்விப்பட்டதும், காவல், தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 30 பேர் காயமடைந்தனர். அவர்கள் அவுரங்காபாத், சதார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றச் சென்ற போலீஸாரும் காயமடைந்தனர்.
விபத்து குறித்து, உதவிகாவல் ஆய்வாளர், வினய் குமார் சிங் கூறுகையில், விபத்துக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை. வீட்டின் உரிமையாளர் அனில் கோஸ்வாமி, கேஸ் சிலிண்டரில் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறுகிறார். சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.
தீபாவளி கொண்டாட்டம் முடிவடைந்த பின்னர் சத் பூஜை கடைபிடிக்கப்படுகிறது. நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் பக்தர்கள் சூரியனை வழிபடுகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் சத் பூஜை விழா, பிஹார், உத்கரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.