Published : 29 Oct 2022 05:11 AM
Last Updated : 29 Oct 2022 05:11 AM

மாநிலங்களுக்கு பிரதமர் மோடி யோசனை - ஒரே நாடு, ஒரே காவல் சீருடை

ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் நேற்று நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டத்தில் காணொலி வாயிலாகப் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர். படம்: பிடிஐ

புதுடெல்லி: நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரேவிதமான சீருடையை அறிமுகம் செய்தால், அவர்களின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி யோசனை தெரிவித்தார்.

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம், ஹரியாணா மாநிலம் சூரஜ்கண்ட்டில் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. இதில், மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள் பங்கேற்றனர்.

காவல் துறையை நவீனமயமாக்குவது, சைபர் குற்ற மேலாண்மை, குற்ற நீதி முறையில் தகவல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது, எல்லை மேலாண்மை, கடலோரப் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, போதைப் பொருள் கடத்தலை முறியடிப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் நேற்று காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: கடந்த சில ஆண்டுகளாக தீவிரவாதத் தொடர்புகளை ஒழிப்பதில் அனைத்து மாநில அரசுகளும் பொறுப்புடன் செயல்பட்டுள்ளன. தீவிரவாதத்தை ஒழிப்பதில் நமது படைகளை, ஒருங்கிணைத் துக் கையாள வேண்டும்.

அனைத்துவிதமான நக்சல் கொள்கைகளையும் முறியடிக்க வேண்டும். அது துப்பாக்கி கலாச்சாரமாக இருந்தாலும் சரி, அல்லது எழுத்து வடிவில் இருந்தாலும் சரி, அவற்றுக்குத் தீர்வுகாண வேண்டும்.

பொய் செய்திகளால் ஆபத்து: தற்போது பொய் செய்திகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது. ஒரு சிறிய பொய் செய்திகூட, நாடு முழுவதும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. அதனால், சமூக ஊடகங்களில் தகவல்களைப் பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை மக்கள் சரிபார்க்க வேண்டும். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மக்களின் உரிமைகளுக்காக வும், பாதுகாப்புக்காகவும், எதிர் மறையான சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது நமது பொறுப்பு.

நவீனத் தொழில்நுட்பங்களுக்கு இணையாக, ஸ்மார்ட் சட்டம் அவசியம். குற்றவாளிகளைவிட, பாதுகாப்பு முகமைகள் 10 அடி முன்னதாக இருக்க வேண்டும். தற்போது குற்றங்கள் மாறிக் கொண்டிருக்கின்றன. எனவே, புதிய தொழில்நுட்பங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டும். 5-ஜி யுகத்துக்குள் நாம் நுழைந்துள்ளோம். எனவே, அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், தானியங்கி முறையில் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் சிசிடிவி தொழில்நுட்பங்களில் பல மடங்கு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவின் சட்டம்-ஒழுங்கு மேலாண்மை நவீனமயமாகி வருகிறது. தொழில்நுட்பங்கள் குற்றங்களைத் தடுக்க மட்டும் உதவவில்லை, குற்றப் புலனாய்வுகளிலும் உதவுகின்றன. காவல் நிலையங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு மேம்பட வேண்டும். போலீஸாரின் திறமையையும், சட்டம்-ஒழுங்கையும் மேம்படுத்த மாநில போலீஸாரிடையே உள்ள தொடர்பு மிகவும் முக்கியமானது.

தற்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஒரு மாநிலத்துடன் முடிந்துவிடுவதில்லை. தேசிய, சர்வதேச அளவில் குற்றங்கள் நடைபெறுகின்றன. நவீனத் தொழில்நுட்பம் மூலம் குற்றவாளிகள், தங்களது சக்தியை மேம்படுத்தி, குற்றங்களைப் புரிகின்றனர். அவர்கள் தொழில் நுட்பங்களைத் தவறாகப் பயன் படுத்துகின்றனர்.

சைபர் குற்றங்கள், ட்ரோன்கள் மூலம் நடைபெறும் ஆயுதம் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களை முறியடிக்க, நாம் புதிய தொழில்நுட்பத்துக்கு மாற வேண்டும். மத்திய, மாநில விசாரணை அமைப்புகள் இடையே ஒருங்கிணைப்பு அவசியம். ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சிக்கு, சூரஜ்கண்ட்டில் நடைபெறும் மாநில உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டம் மிகச் சிறந்த உதாரணம்.

திணிக்க முயற்சிக்கவில்லை: மாநிலங்கள் புதிய விஷ யங்களைக் கற்று, நாட்டுக்காக இணைந்து செயல்பட முடியும். நாடு முழுவதும் போலீஸாரின் அடையாளம் ஒரே மாதிரியாக இருந்தால், அது சிறந்ததாக இருக்கும் என கருதுகிறேன். இதற்கு, நாடு முழுவதும் போலீஸாருக்கு ஒரே மாதிரிான சீருடையைக் கொண்டுவரலாம். இது ஒரு யோசனைதான். இதை மாநிலங்களிடம் திணிக்க நான் முயற்சிக்கவில்லை. இன்னும் 5, 50 அல்லது 100 ஆண்டுகளில் இது சாத்தியமாகலாம். இதுகுறித்து சிந்தித்துப் பாருங்கள். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x