

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எங்களது கட்சித் தொண்டர்களை தொந்தரவு செய்தால் அவர்களது வீட்டுப் பெண்களை பலாத்காரம் செய்ய உத்தரவிடுவேன் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. தபஸ் பால் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவரது மனைவி நந்தினி பால் கணவர் தெரிவித்து கருத்துக்கு மன்னிப்புக் கோரியுள்ளார்.
தபஸ் பால் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், மக்களவை சபாநாயகர் தானாகவே முன்வந்து தபஸ் பால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
தேசிய மகளிர் ஆணையமும், திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. தபஸ் பால் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேசிய மகளிர் ஆணைய தலைவர் மம்தா சர்மா கூறுகையில்: "தபஸ் பால் உடனடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும். ஆனால், அவர் மீது இதுவரை எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை. கட்சி ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.
இதற்கிடையில், கட்சித் தலைமையகம் தபஸ் பாலிடம் பொது இடத்தில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியதற்கு விளக்கம் கோரியுள்ளது.
திரிணமூல் செய்தித் தொடர்பாளர் டெரக் ஓ பிரெயின் கூறுகையில், கட்சி ஒருபோதும் இது போன்ற கருத்துகளை அங்கீகரிக்காது என்றார்.