Published : 28 Oct 2022 09:18 PM
Last Updated : 28 Oct 2022 09:18 PM

‘இலவசங்கள்’ முதலான வாக்குறுதிகளை வரையறுக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இல்லை: காங்கிரஸ்

ஜெயராம் ரமேஷ் | கோப்புப் படம்

புதுடெல்லி: “தேர்தல் வாக்குறுதிகளை வரையறுக்கும் அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு இல்லை” என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் ஏராளமான வாக்குறுதிகள் அளிப்பதை ஒழுங்குபடுத்தும் நோக்கில், தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு கடிதம் எழுதி இருந்தது. அதில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளை அரசியல் கட்சிகள் முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும் என்பதை அமல்படுத்துவது தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு வலியுறுத்தப்பட்டிருந்தது. அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது.

இந்தக் கடிதத்திற்கு காங்கிரஸ் சார்பில் அதன் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் அளித்துள்ள பதில்: “தேர்தல் பிரச்சாரங்களின்போது இலவச வாக்குறுதிகளை வழங்கும் விவகாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. இதில் தலையிடுவதை ஆணையம் தவிர்க்க வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் ஒரு கட்சியின் சித்தாந்தத்தை சிறப்பாக பிரதிபலிக்கும் ஒரு வழிமுறை. துடிப்பான ஜனநாயக அமைப்பில் இது ஓர் அங்கம். இவை வாக்காளர்களின் பகுப்பாய்வுக்கானவை. எனவே, இதை ஒருபோதும் தீவிரமானதாகக் கருதக் கூடாது.

ஒருவேளை தேர்தல் ஆணையம் இது தொடர்பாக விதிகளை வகுக்குமானால், அதனை அது எவ்வாறு நிறைவேற்றும்? வாக்குறுதிகளை ஒரு கட்சி நிறைவேற்றாவிட்டால், ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கும்? அதனால், கட்சியை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய முடியுமா? வாக்குறுதிகளை அமல்படுத்த வலியுறுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல முடியுமா? இவை எல்லாமே வீண்.

காங்கிரஸ் கட்சி தேர்தல் காலத்தில் அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உத்தரவாதத் திட்டம், நிலம் கையகப்படுத்தும் சட்டம், உணவு உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது.

தேர்தல் ஆணையம் கவனம் செலுத்த வேண்டிய பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதிகாரபூர்வ முகவர்களை தவறாக பயன்படுத்துவது, தடை செய்யப்பட்ட நேரங்களில் பிரதமர் பிரசாரம் செய்ய அனுமதிப்பது, ஆளும் கட்சிக்கு ஆதரவான அணுகுமுறைகளை பின்பற்றுவது ஆகியவற்றை சரி செய்ய தேர்தல் ஆணையம் கவனம் கொடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக நிலைப்பாடு என்ன? - முன்னதாக, ‘தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது, மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது’ என்று தேர்தல் ஆணையத்திடம் பாஜக பரிந்துரை அளித்துள்ளது. அதன் விவரம்: தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்கள் தேவையற்றது, வளர்ச்சி திட்டங்கள் அவசியமானது - தலைமை தேர்தல் ஆணையத்திடம் பாஜக பதில் மனு

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x