Published : 28 Oct 2022 04:32 PM
Last Updated : 28 Oct 2022 04:32 PM

மும்பை தாக்குதலுக்குக் காரணமானவர்கள் தற்போதும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள்: ஜெய்சங்கர் வேதனை

மும்பை: கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் தற்போதும் பாதுகாப்பாகவே இருக்கிறார்கள் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வேதனை தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத்திற்கு நிதி உதவி அளிக்கப்படுவதற்கு எதிராக உலக நாடுகள் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கில் ஐ.நா பாதுகாப்பு அவையின் முறைசாரா மாநாடு மும்பையில் இன்று (அக். 28) நடைபெற்றது. ஐ.நா பாதுகாப்பு அவையின் தலைவர் மைக்கேல் மவுஸ்ஸா, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுப் பேசினர்.

இந்நிகழ்வில் மைக்கேல் மவுஸ்ஸா பேசும்போது, “தீவிரவாதிகள் கிரிப்டோகரன்சியின் மூலம் நிதி உதவி பெறுவதும், சமூக ஊடகங்கள் மூலம் ஆதரவாளர்களை திரட்டுவதும் அதிகரித்து வருகிறது. நவீன தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதை தடுக்க வேண்டிய பொறுப்பு உலக நாடுகளுக்கு இருக்கிறது. தீவிரவாதத்திற்கு எதிரான தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது. இவ்விஷயத்தில் அனைத்து மட்டங்களிலும் இணைந்து செயலாற்ற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தீவிரவாதிகள் ஆட்களை சேர்ப்பதை தடுக்க அனைத்து நாடுகளும் முன்வர வேண்டும்” என்று பேசினார்.

இதையடுத்து எஸ்.ஜெய்சங்கர் பேசியதாவது: “தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதில் சில நேரங்களில் ஐ.நா-வால் போதிய வெற்றியை பெற முடிவதில்லை. இதற்குப் பின்னால் அரசியல் காரணங்கள் இருக்கின்றன. கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி நிகழ்த்தப்பட்ட மும்பை தீவிரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் இன்னமும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை தண்டிக்க முடியவில்லை. இந்தத் தாக்குதல் மும்பை மீதானது அல்ல. அது சர்வதேச சமூகத்திற்கு எதிரானது. மும்பை தீவிரவாத தாக்குதலின்போது, துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன், அவர்கள் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகளை பொறுப்பேற்கச் செய்வதில் இருந்தும் அவர்களை நீதியின் முன் நிறுத்துவதில் இருந்தும் சர்வதேச சமூகம் பின்வாங்காது என்ற செய்தியை நாம் வலுவாக வழங்க வேண்டியது மிகவும் முக்கியம்.

பல நாடுகளில் தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், மற்ற நாடுகளைவிட அதிக விலை கொடுத்த நாடு இந்தியா. தீவிரவாத தடுப்புக்கு ஐ.நா 5 முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒன்று, FATF, Egmont Group ஆகியவற்றுடன் இணைந்து ஐ.நா செயல்பட வேண்டும். இரண்டு, அரசியல் காரணங்களுக்காக தீவிரவாதத்திற்கு எதிராக மிதமான அணுகுமுறையை பின்பற்றுவதில்லை என்பதில் ஐ.நா உறுதியாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் இருக்க வேண்டும்.

மூன்று, தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பு அளிப்பது, பயிற்சிபெற இடம் அளிப்பது, நிதி உதவி வழங்குவது, சித்தாந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் ஆதரவு வழங்குவது ஆகியவற்றில் எந்த ஒரு நாடும் ஈடுபட முடியாத அளவுக்கு சர்வதேச ஒத்துழைப்பை ஐ.நா உறுதிப்படுத்த வேண்டும்.

நான்கு, திட்டமிட்ட குற்றம், போதைப் பொருள் கடத்தல், ஆயுத கடத்தல் ஆகியவற்றுடன் தீவிரவாதத்திற்கு தொடர்பு இருப்பதை ஒப்புக்கொண்டு அதை தடுக்க அனைத்து நாடுகளும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். ஐந்து, நவீன தொழில்நுட்பங்களை தீவிரவாதிகள் பயன்படுத்துவதைத் தடுக்க புதுமையான யோசனைகளையும் தீர்வுகளையும் உலக நாடுகள் வழங்க ஊக்குவிக்க வேண்டும்” என்றார். முன்னதாக, மும்பை தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x