

புதுடெல்லி: போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்க தேவை இல்லை என்பதை மட்டுமே அடிப்படையாக வைத்து முன்ஜாமீன் வழங்க கூடாது என உயர் நீதிமன்றங்களுக்கு, உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஒருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு கேரள உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியிருந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் சூர்யகாந்த், ஜே.பி.பர்திவாலாஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
ஒரு வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவருக்கு போலீஸ் பாதுகாப்பில் விசாரணை தேவையில்லை என்றால், அந்த நபருக்கு முன்ஜாமீன் வழங்கலாம் என்ற தவறான கருத்து உள்ளது. இதனடிப்படையில் பல முன்ஜாமீன்கள் வழங்கப்பட்டுள்ளதை நாங்கள் பார்க்கிறோம். முன்ஜாமீன் வழங்குவதற்கான அம்சங்களில் போலீஸ் பாதுகாப்பு விசாரணை தேவை இல்லை என்பதும் ஒன்று.
ஆனால் அதை மட்டுமே அடிப்படையாக வைத்து முன்ஜாமீன் வழங்கும்போது முடிவு செய்யக் கூடாது. பல வழக்குகளில் போலீஸ்பாதுகாப்பு விசாரணை தேவை இல்லாமல் இருக்கலாம். முன்ஜாமீன் மனுக்களை விசாரிக்கும்போது, குற்றம் சாட்டப்பட்டவர் என்ன செய்தார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். அதன்பின் அவர் செய்ய குற்றத்தின் கடுமையையும், அதற்குரிய தண்டனையையும் பார்க்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பு விசாரணை தேவையில்லை என்றாலும், அதுமட்டுமே முன்ஜாமீன் வழங்கவதற்கு அடிப்படையாக இருக்க முடியாது. போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.