Published : 28 Oct 2022 05:35 AM
Last Updated : 28 Oct 2022 05:35 AM

குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் - உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுரை

ஹரியாணாவின் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கிய உள்துறை அமைச்சர்களின் சிந்தனைக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், உள்துறை அமைச்சர்கள், செயலர்கள், காவல் துறைத் தலைவர்கள். படம்: பிடிஐ

புதுடெல்லி: குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தினார்.

உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பான சிந்தனைக் கூட்டம் ஹரியாணாவின் சூரஜ்கண்டில் நேற்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள், உள்துறைச் செயலர்கள், காவல் துறை தலைவர்கள், மத்திய ஆயுதக் காவல்படைத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். தலைமை வகித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு அந்தந்த மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. நாட்டில் குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

உள்நாட்டுப் பாதுகாப்பில் மத்திய அரசு திறம்படச் செயல்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு மேம்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, வடகிழக்கில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டு, போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தீவிரவாதத்தைத் தடுக்க அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமையின் (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும். 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகளை ஏற்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளோம். என்ஐஏ அமைப்புக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டு உள்ளன. பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு தடை விதித்ததுபோல, சீக்கியருக்கான நீதி அமைப்புக்கும் தடை விதிக்கப்படும். நாட்டுக்காக 35,000 போலீஸார், மத்திய ஆயுதப் படையினர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாகப் பேசுகிறார். கடந்த சுதந்திர தின உரையின்போது பிரதமர் அறிவித்த "2047 தொலைநோக்குப் பார்வை" திட்டங்களைச் செயல்படுத்துவது தொடர்பாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.

ஸ்டாலின் பங்கேற்கவில்லை: தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரிடம் உள்துறை அமைச்சகம் உள்ளது. எனினும், இக்கூட்டத்தில் இவர்கள் பங்கேற்கவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சிபுரியும் மாநிலங்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டார், மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தாமங் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x