

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எஸ்.சி. வகுப்பினருக்கு 15 சதவீதமும், எஸ்.டி. வகுப்பினருக்கு 3 சதவீதமும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
இந்த சதவீதத்தின் அளவை மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப 7 சதவீதம் அதிகரிப்பது குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கடந்த வாரம் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி விவாதித்தார். அப்போது, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா (காங்கிரஸ்), குமாரசாமி (மஜத) உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும் ஒப்புதல் தெரிவித்தனர். இதையடுத்து எஸ்.சி. வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகவும், எஸ்.டி. வகுப்பினரின் இட ஒதுக்கீட்டை 3 சதவீதத்தில் இருந்து 7 சதவீதமாகவும் அதிகரிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.