

ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக, மக்களவை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கின. இதே பிரச்சினையில், மாநிலங்களையிலும் திங்கட்கிழமை கடும் அமளி நிலவியது.
மக்களவை இன்று தொடங்கியவுடன், கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள், ரூபாய் நோட்டு விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர்.
கேள்வி நேரத்துக்குப் பின்னர் இந்த விவகாரம் எடுத்துக்கொள்ளப்படும் என்று சபாநாயகர் சுமித்ரா மகாஜன், எதிர்க்கட்சியினரின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, அவையின் மையப்பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியபடி, பிரதமர் மோடிக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கடுமையாக கோஷங்களை எழுப்பினர். உறுப்பினர்கள் விதிகளை மீறி அமளியில் ஈடுபடுவதாக சபாநாயகர் எச்சரித்தார்.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இடதுசாரி உறுப்பினர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்டோர் தொடர் அமளியில் ஈடுபட, அதிமுக உறுப்பினர்கள் தங்கள் இருக்கையின் அருகே நின்று கொண்டிருந்தனர்.
தொடர் அமளி காரணமாக, மக்களவையை 12 மணி வரை ஒத்திவைத்தார் சுமித்ரா மகாஜன். பின்னர், அவை மீண்டும் கூடியதும் தொடர்ந்து இதே பிரச்சினையில் அமளி நிலவியதால் அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இதனிடையே, ரூபாய் நோட்டு பிரச்சினையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
கடந்த 16-ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில், ரூபாய் நோட்டு பிரச்சினையால் இந்தத் தொடர் முழுவதுமே முற்றிலும் முடங்கும் சூழல் நிலவுவது கவனிக்கத்தக்கது.