Last Updated : 28 Nov, 2016 08:45 PM

 

Published : 28 Nov 2016 08:45 PM
Last Updated : 28 Nov 2016 08:45 PM

கறுப்பு பணம் கண்டுபிடிக்கப்பட்டால் 85 சதவீதம் வரி: நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா தாக்கல்

கறுப்புப் பணம் வைத்திருப்போரை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால் அவர்களுக்கு 85 சதவீதம் வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுபோல கறுப்பு பணம் வைத்திருப்போர் தாமாக முன்வந்து டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவித்தால் 50 சதவீத வரி விதிக்கப்படும்.

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி வருமான வரி சட்ட (2-வது திருத்த) மசோதா 2016-ஐ நேற்று தாக்கல் செய்தார். இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:

‘பிரதான் மந்திரி கிராபி கல்யாண் யோஜனா 2016’ (பிஎம்ஜிகேஒய்) திட்டம் அறிமுகம் செய்யப்படும். இதன்படி, நவம்பர் 10 முதல் டிசம்பர் 30-ம் தேதிக்குள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வருமான வரித் துறைக்கு முறையாக கணக்கு காட்டாமல் (ரூ.2.5 லட்சத்துக்கு மேல்) தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தவர்கள் வருமான வரித் துறைக்கு டிசம்பர் 30-க்குள் தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு தாமாக தகவல் தெரி விப்போர் கணக்கில் காட்டாத மொத்த தொகை மீது 30 சதவீத வரி செலுத்த வேண்டும். இதுதவிர, 10 சதவீதம் அபராதமும் 30 சதவீத வரித் தொகை மீது 33 சதவீத உபரி வரியும் (பிஎம்ஜிகேஒய் செஸ்) விதிக்கப்படும். அதாவது ஒட்டுமொத்தமாக சுமார் 50 சதவீத வரி செலுத்த நேரிடும்.

மேலும் கணக்கில் காட்டாமல் டெபாசிட் செய்த தொகையில் 25 சதவீதத்தை 4 ஆண்டுகளுக்கு வெளியில் எடுக்க முடியாது. இந்த காலத்துக்கு வட்டியும் வழங்கப்படமாட்டாது இதற்கான திட்டத்தை ரிசர்வ் வங்கி பின்னர் அறிவிக்கும்.

இந்த திட்டத்தின் மூலம் கிடைக் கும் நிதி, நீர்ப்பாசனம், அனை வருக்கும் வீடு, கழிவறைகள், உள்கட்டமைப்பு வசதி, தொடக்கக் கல்வி, சுகாதாரம் ஆகிய திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

இதுபோல, டிசம்பர் 30-ம் தேதிக் குப் பிறகு கறுப்புப் பணம் வைத் திருப்பவர்களை வருமான வரித் துறையினர் கண்டுபிடித்தால், அவர்களுக்கு 60 சதவீத வரியும் 25 சதவீத உபரி வரியும் விதிக்கப்படும். இதுதவிர, மேலும் 10 சதவீத அபராதம் விதிப்பது பற்றி வருமான வரித் துறை அதிகாரியே முடிவு செய்யலாம். இதன்படி மொத்தம் 85 சதவீத வரி செலுத்த வேண்டி இருக்கும்.

இதுகுறித்து வருவாய் துறை செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறும்போது, “பிஎம்ஜிகேஒய் திட் டத்தின் கீழ் வருமானம் எப்படி கிடைத்தது என கேள்வி கேட்கப் படமாட்டாது. மேலும் செல்வ வரி, சிவில் மற்றும் இதர வரி சட்டங் களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். அதேநேரம், அன்னிய செலாவணி நிர்வாக சட்டம் (பெமா), சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டம் (பிஎம்எல்ஏ), போதைப்பொருள் மற்றும் கறுப்பு பண தடுப்புச் சட்டங்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்காது” என்றார்.

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்குப் பிறகு, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் ஏழை மக்களின் (ஜன் தன்) வங்கிக் கணக்குகளை பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகள் டெபாசிட் செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகள் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் உரிய கணக்கு காட்ட வேண்டும் என்றும், இல்லாவிட்டால் வரி மற்றும் வரி மீது 200 சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் வருமான வரித் துறை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

மொத்த பணத்துக்கும் வரி

வருமான வரித் துறை முதன்மை ஆணையர் - தமிழ்நாடு (ஓய்வு) எஸ்.செந்தாமரைக்கண்ணன் கூறும்போது, “புதிய சட்டத் திருத்தத்தின் படி, கணக்கில் காட்டப்படாத பணத்தில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் உள்ள பணத்துக்கு தான் வரியும் அபராதமும் செலுத்த வேண்டி இருக்குமா? என்று கேட்கிறீர்கள். அப்படி இல்லை. வருமான வரிச் சட்டம் 1961 பிரிவு 68-ன்படி கணக்கில் காட்டப்படாத பணமானது விளக்கப்பட முடியாத ரொக்கமாக வரவு வைக்கப்படும். இந்த மொத்த பணத்துக்குமே வரியும் அபராதமும் செலுத்த வேண்டி இருக்கும். வருமானவரிச் சட்டம் பிரிவு 115 பி.பி.இ-யின்படி, கணக்கில் காட்டப்படாத பணம் எவ்வளவு இருந்தாலும் அதற்கு ஒட்டுமொத்த வருமான வரியாக 30 சதவீதம் விதிக்க முடியும். இந்த பிரிவைத்தான் இப்போது திருத்தி இருக்கிறார்கள்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x