ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஜெட் விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை

ஆக்ரா - லக்னோ எக்ஸ்பிரஸ் சாலையில் ஜெட் விமானங்கள் தரையிறங்கி ஒத்திகை
Updated on
1 min read

இந்திய விமானப் படையின் ஜெட் விமானங்கள் தரையிறங்கவும் மற்றும் தரையில் இருந்து எழும்பிச் செல்லவும் கூடிய நம் நாட்டின் முதல் நெடுஞ்சாலையான ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலை நேற்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் 6 ஜெட் விமானங்கள் தரையிறங்கி அதே வேகத்தில் மேலெழும்பிச் சென்றது மக்களை பரவசப்படுத்தியது.

ரூ.13,200 கோடி செலவிலான இத்திட்டம் சாதனை கால அளவாக 22 மாதத்தில் முடிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதனை 8 வழிச் சாலையாகவும் விரிவுபடுத்த முடியும். 302 கி.மீ. நீளமுள்ள இச்சாலையில் 3.3. கி.மீ. நீளப் பகுதியை போர் விமானங்களின் ஓடுதளமாகவும் பயன்படுத்த முடியும். அவசர காலங்களிலும் விமான தளங்கள் பயன்பாட்டுக்கு கிடைக்காத போதும் விமானப் படை விமானங்கள் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இச்சாலையின் திறப்பு விழா உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் சிங் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்து 6 ஜெட் விமானங்கள் அதிவேகமாக தரையிறங்கி அதே வேகத்தில் வானில் பறந்து சென்றன. இந்த அரிய காட்சி அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பரவசப்படுத்தியது.

இதுகுறித்து விமானப் படை அதிகாரி ஒருவர் கூறும்போது, “விமானப் படையின் ஜெட் விமானங்கள் மதியம் 1.07 மணிக்கு மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் தரையிறங்கி மீண்டும் பறந்து சென்றன” என்றார்.

ஆக்ரா – லக்னோ எக்ஸ்பிரஸ் சாலை தற்போது திறக்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்தான் மக்களின் பயன்பாட்டுக்கு வருகிறது. தற்போது லக்னோவில் இருந்து டெல்லி செல்ல 12 மணி முதல் 14 மணி நேரம் ஆகிறது. இச்சாலை பயன்பாட்டுக்கு வரும்போது லக்னோ – டெல்லி இடையிலான பயண நேரம் 6 மணி நேரமாக குறையும்.

முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசும்போது, “உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும்போது, இச்சாலை காஜிப்பூர், பல்லியா வரை நீட்டிக்கப்படும்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in