

வருங்கால வைப்பு நிதியில் (பி.எப்.) இணைந்துள்ள தொழிலா ளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படும் என பட்ஜெட்டில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, அரசுக்கு நடப்பு நிதியாண்டில் ரூ. 1,271 கோடி கூடுதலாக செலவாகும். இதன் மூலம் ரூ.1,000க்கும் குறைவான ஓய்வூதியம் பெறும் 5 லட்சம் விதவைகள் உட்பட 28 லட்சம் பேர் பயனடைவர். இதற்காக ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இபிஎஸ்-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதிய திட்டத்துக்கான ஊதிய வரம்பு ரூ.6,500-ல் இருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஊதிய வரம்பு உயர்வால் கூடுதலாக 50 லட்சம் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறுவர்.
மொத்தம் 44 லட்சம் பேர் இபிஎப்ஓ திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.
ஒரே பி.எப். கணக்கு எண்
தொழிலாளர் வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஓ), ஒரே கணக்கு எண் (யுஏஎன்) திட்டத்தை அறிமுகம் செய்யவுள்ளது. வேறு நிறுவனங்களுக்கு மாறினாலும், ஒரே கணக்கு எண்ணைப் பயன்படுத்த முடியும். வரும் அக்டோபரில் இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், 5 கோடிக்கும் அதிகமான இபிஎப்ஓ சந்தாதாரர்கள் பயனடைவர்.