Published : 27 Oct 2022 09:19 PM
Last Updated : 27 Oct 2022 09:19 PM

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்ஐஏ கிளைகள் அமைக்கப்படும்: அமித் ஷா

சூரஜ்கண்ட் (ஹரியாணா): நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ)-யின் கிளைகள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சுதந்திர தின உரையின்போது பிரதர் நரேந்திர மோடி அறிவித்த தொலைநோக்கு திட்டம் 2047-ஐ அமல்படுத்துவது தொடர்பாக மாநில உள்துறை அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு சிந்தனை முகாம் என்ற பெயரில் ஹரியாணாவின் சூரஜ்கண்ட்டில் இன்று தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியது: “தீவிரவாதத்தை முற்றாக எதிர்க்கும் கொள்கையை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது. இதற்காக, என்.ஐ.ஏ உள்ளிட்ட நாட்டின் புலன் விசாரணை அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தீவிரவாத தடுப்புக்கான வலிமையான கட்டமைப்பை உருவாக்கும் நோக்கில், வரும் 2024-க்குள் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் என்.ஐ.ஏ கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாட்டின் முன் உள்ள அனைத்து சவால்களுக்கும் தீர்வு காண்பதற்கான வழிகாட்டலை இந்த சிந்தனை முகாம் வழங்கும்.

ஒரு காலத்தில் இடதுசாரி தீவிரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள், ஜம்மு காஷ்மீர், வட கிழக்கு ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளாக இருந்து வந்தன. ஆனால், இந்த பகுதிகள் தற்போது வளர்ச்சிக்கான பகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன. இணைய குற்றங்கள் தற்போது நாட்டிற்கும் உலகிற்கும் முக்கிய சவாலாக விளங்குகிறது. இதற்கு எதிரான யுத்தத்தை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.

ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு, கூட்டு செயல்பாடு என்பதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. முழுமையான அரசு, டீம் இந்தியா எனும் அணுகுமுறையின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டையும் நமது இளைஞர்களையும் போதைப் பழக்கத்தில் இருந்து பாதுகாக்க மத்திய அரசு உறுதியாக உள்ளது. ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அரசின் நோக்கத்தை தெளிவுபடுத்துகிறது.

சட்டம் - ஒழுங்கு என்பது மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. ஆனால், குற்றங்கள் மாநில எல்லைகளுக்கு உட்பட்டவையாக இருப்பதில்லை. எனவே, எல்லை கடந்த குற்றங்களை எதிர்கொள்வதற்கான திட்டத்தை மாநிலங்கள் கலந்து ஆலோசித்து வகுக்க வேண்டும்” என்று அமித் ஷா பேசினார்.

இந்த மாநாட்டின் இரண்டாவது நாளான நாளை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பங்கேற்று உரையாற்ற இருக்கிறார். இன்றைய மாநாட்டில், உத்தரப் பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், கேரளா, அசாம் உள்ளிட்ட 8 மாநிலங்களின் முதல்வர்கள், 16 மாநிலங்களின் துணை முதல்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். எனினும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்கவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x