

கர்நாடக முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குடும்பத்தின் ஆடம்பர திருமணத் துக்கு ஏற்பாடுகள் செய்த தனியார் நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட் டுள்ளது.
ஜனார்த்தன ரெட்டி மகள் பிராமணிக்கும் ஹைதராபாத் சுரங்க அதிபர் ராஜீவ் ரெட்டிக்கும் பெங்களூரு அரண்மனையில் கடந்த 16-ம் தேதி ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான நரசிம்ம மூர்த்தி கர்நாடக வருமான வரித்துறை இயக்குநரிடம் புகார் அளித்தார். அதில், “500, 1000 ரூபாய் நோட்டு கள் செல்லாது என்ற அறிவிப்பால் மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஜனார்த்தன ரெட்டி ரூ.650 கோடி செலவில் மகளுக்கு திருமணம் செய்துள்ளார். அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என விசாரிக்க வேண்டும்” என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து கர்நாடக வருமான வரித்துறை இணை இயக்குநர் சஞ்சீவ் குமார் வர்மா தலைமையில் பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் நேற்று முன்தினம் சோதனை நடத்தப்பட்டது. மேலும் ஆடம்பர திருமணம் தொடர்பான அனைத்து வரவு செலவு கணக்குகளை வரும் 25-ம் தேதிக்குள் ஜனார்த்தன ரெட்டி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
மேலும் திருமணத்துக்காக எந்த நிறுவனம் செட் அமைத்தது? புகைப்படம், வீடியோ எடுத்தவர் யார்? திருமண உடைகள் எந்தக் கடையில் வாங்கப்பட்டன? தங்க, வைர, நகைகள் எங்கு வாங்கப் பட்டன? எத்தனை வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டன, தயாரித்தவர் யார்? திருமண நிகழ்வை ஒருங்கிணைத்த நிறுவனம் எது? திருமணத்துக்கான மொத்த செலவு கணக்கு? வங்கி விவரங்கள் என சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதனிடையே ஜனார்த்தன ரெட்டியின் நண்பரும் பெல்லாரி தொகுதியின் பாஜக எம்பியுமான ஸ்ரீராமலு மீது வருமான வரித்துறை அதிகாரிகளின் பார்வை திரும்பி இருக்கிறது. இந்த ஆடம்பர திருமணத்தை முன்னின்று நடத்திய ஸ்ரீராமலு இந்த திருமணத்துக்காக கோடிக்கணக்கில் பணம் செலவு செய்துள்ளார்.
எனவே அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் ஸ்ரீராமலு தனது வீடு மற்றும் அலுவலகங்களில் இருந்து முக்கிய ஆவணங்களை வேறு இடங்களுக்கு மாற்றி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.