Published : 27 Oct 2022 04:57 PM
Last Updated : 27 Oct 2022 04:57 PM

ஆப்ரேஷன் லோட்டஸ் புகார் | “மாநிலக் கட்சிகளை அழிக்கும் வேலையை பாஜக செய்கிறது” - குமாரசாமி ஆவேசம்

ஹெச்.டி குமாரசாமி, கே.சந்திர சேகர ராவ் | கோப்புப்படம்

பெங்களூரு: மாநிலக் கட்சிகளை அழிக்கும் வேலையை பாஜக செய்து வருவதாக கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி குற்றம்சாட்டியுள்ளார். ஆளும் தெலங்கானா அரசைக் கவிழ்க்க அக்கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக முயன்றதாக எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவின் முதல்வர் சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதியைச் சேர்ந்த நான்கு எம்எல்ஏக்களை பாஜகவில் இணைப்பதற்காக, அவர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக மூன்று பேரை தெலங்கானா போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

இந்த விவகாரம் குறித்து கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், "முனுகோடு இடைத்தேர்தலுக்கு முன்பாக, கேசிஆர் கட்சியின் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் வேலையையும், தெலங்கானா அரசைக் கவிழ்க்கும் பணியையும் பாஜக செய்து வருகிறது" என்று குற்றம்சாட்டினார்.

ஆப்ரேஷன் லோட்டஸ் குறித்து ஹெச்.டி.குமாரசாமி மேலும் கூறுகையில், "தெலங்கானாவில் நடந்துள்ள இந்த விவகாரம் எனக்கு வியப்பு அளிக்கவில்லை. கேசிஆர் தலைமையிலான தெலங்கானா அரசைக் கவிழ்க்க பாஜக முயற்சி செய்கிறது. மாநிலக் கட்சிகள், எதிர்கட்சிகளை இல்லாமல் ஆக்கும் வேலையை அவர்கள் செய்து வருகின்றனர். கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்தப் பணியினைச் செய்து வெற்றியும் அடைந்துள்ளனர்.

தெலங்கானாவில் ஆட்சியைக் கவிழ்க்க சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை பாஜக பயன்படுத்துகிறது. பிரதமர் மோடி, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருகிறார். தெலங்கானாவில் எம்எல்ஏகளை விலைக்கு வாங்க எந்தப் பணம் பயன்படுத்தப்படுகிறது என்று மோடி தெளிவு படுத்த வேண்டும்” என்று குமாரசாமி தெரிவித்தார்.

எம்எல்ஏகளை கவர முயற்சி: தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் ஜி.பாலராஜூ, பி. ஹர்ஷ்வர்தன் ரெட்டி, ஆர்.கந்தராவ், ரோஹித் ரெட்டி ஆகிய நான்கு எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுக்க முயன்றது தொடர்பாக தெலங்கானா போலீஸார் புதன்கிழமை மூன்று பேரை கைது செய்தனர். இந்தக் கைது நடவடிக்கையைத் தொடர்ந்து, முனுகோடு இடைத்தேர்தலுக்கு முன்பாக தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான ஆளுங்கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

பாஜக மறுப்பு: இதற்கிடையில், பாரத் ராஷ்டிர சமிதியின் இந்தக் குற்றசாட்டை மறுத்துள்ள அம்மாநில பாஜக தலைவர் பந்தி சஞ்சய் குமார், இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "முதல்வர் கேசிஆரின் கதை, திரைக்கதை, இயக்கத்தில் நிகழ்த்தப்பட்டுள்ள மொய்னாபாத் பண்ணை வீட்டு நிகழ்வு சிரிப்பையே வரவழைக்கிறது. அது டிஆர்எஸ் கட்சிக்கு சொந்தமான பண்ணை வீடு, டிஆர்எஸ் கட்சியே குற்றம்சாட்டியுள்ளது, அவர்களே பாதிக்கப்பட்டுள்ளனர், அந்த கட்சியினரே குற்றவாளி.

கேசிஆர் அவர்களே... இவை எதுவும் நீங்கள் சொல்லி நடக்கவில்லை என்று யாதகிரி லக்ஷ்மி நரசிம்மர் கோயிலுக்கு வந்து சாமி மீது சத்தியம் செய்யுங்கள். தேதியையும் நேரத்தையும் நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த பிரம்மாண்டமான விழாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி, பாரத் ராஷ்டிர சமிதி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு தேசிய கட்சியாக மாற்றப்பட்டது. இந்த விழாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி தனது கட்சியினர் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இருகட்சிகளும் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்க இருக்கிறது என்ற யூகம் வெளியானது. அதேபோல், 2023-ஆம் ஆண்டு கர்நாடகாவில் நடைபெற உள்ள மாநிலத் தேர்தலிலும் இருகட்சிகளும் கூட்டணி அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x