

பெங்களூரு: இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பெங்களூருவில் பிரபலமான வித்யார்த்தி பவனில் மசாலா தோசை சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராகி உள்ளார். இவர் பெங்களூருவைச் சேர்ந்த இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக் ஷதா மூர்த்தியை கடந்த 2009-ம் ஆண்டு மணந்தார்.
இவர்களின் திருமணம் பெங்களூருவில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில், மைசூரு பிராமணர் முறைப்படி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் 56 வகையான கன்னட சைவ உணவுகள் பரி மாறப்பட்டன.
இந்நிலையில், ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராகியுள்ளதால் பெங்களூருவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 'பெங்களூருவின் பெருமைமிகு மருமகன்' என ஃபேஸ்புக், ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துள்ளனர்.
இதனிடையே பெங்களூரு பசவனகுடியில் உள்ள வித்யார்த்தி பவன் நிர்வாகம், ரிஷி சுனக் தங்களது உணவகத்தில் மசாலா தோசை சாப்பிட்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வாழ்த்தியுள்ளது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
1943-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வித்யார்த்தி பவன் உணவகத்தில் மசாலா தோசை, சாகு மசாலா தோசை, இட்லி, உளுந்து வடை, காராபாத், கேசரி பாத் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. சுமார் 80 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த உணவகத்தில் தெற்கு பெங்களூருவாசிகள் மாசாலா தோசை, காஃபி சாப்பிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.