Published : 27 Oct 2022 04:55 AM
Last Updated : 27 Oct 2022 04:55 AM

காங்கிரஸ் கட்சித் தலைவராக கார்கே பதவியேற்பு - சோனியா குடும்பத்தினர் பங்கேற்றனர்

காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. உடன், முன்னாள் தலைவர் சோனியா காந்தி. படம்: பிடிஐ

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கே(80) நேற்று பதவியேற்றுக் கொண்டார்.

கட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் இடையே போட்டி ஏற்பட்டது. இதில் கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1072 வாக்குகளும் பெற்றனர்.

காங்கிரஸ் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமை அலுவலகத்தில் மல்லிகார்ஜுன கார்கேவிடம், கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன் மிஸ்திரி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, "சாதாரண தொண்டரின் மகனை, கட்சித் தலைவராக உயர்த்திய காங்கிரஸ் கட்சிக்கு நன்றி. மக்களிடம் பரப்பப்படும் பொய்களையும், வெறுப்புகளையும் காங்கிரஸ் தகர்க்கும். ஜனநாயகத்தைப் பாதுகாக்க விரும்புவோர் ஒன்றிணைய வேண்டும்.

ராகுலின் தேசிய ஒற்றுமை யாத்திரை, நாட்டுக்கு புதிய சக்தியை அளித்து வருகிறது. கட்சியில் 50 சதவீத பதவிகள், 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும்" என்றார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி உற்சாகம் பெற்று, வலுப்பெறும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒற்றுமையுடனும், பலத்துடனும் காங்கிரஸ் புதிய சவால்களை சமாளித்து முன்னேறும்.

கார்கே கடின உழைப்பால், உயர்ந்த பதவிக்கு வந்துள்ளார். காங்கிரஸ் தலைவராக என்னால் முடிந்ததை, சிறப்பாகச் செய்தேன். தற்போது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விடுபட்டுள்ளது நிம்மதியை அளிக்கிறது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் கட்சியின் தலைவராக கார்கே பொறுப்பேற்றதும், நான் அவரை சந்தித்துப் பேசினேன். கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல எனது முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை அளிப்பதாக நான் அவருக்கு உறுதி அளித்தேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, முன்னாள் துணைப் பிரதமர் ஜெகஜீவன் ராம் ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று, மல்லிகார்ஜுன கார்கே அஞ்சலி செலுத்தினார்.

சசிதரூருக்கு இடமில்லை: இதற்கிடையில், தலைவராகப் பொறுப்பேற்ற கார்கே, கட்சியில் முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் செயற்குழுவுக்குப் பதிலாக, 47 பேர் அடங்கிய வழிகாட்டுதல் குழுவை நேற்று அமைத்தார். அதில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசிதரூர் பெயர் சேர்க்கப்படவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x