

இராக் தலைநகர் பாக்தாத்துக்கு வடமேற்கே 180 கி.மீ. தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி யுள்ள நிலையில், அதில் தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 46 செவிலியர்கள் சிக்கிக்கொண்டுள்ள தாக சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் கூறியுள்ளது.
இது பற்றி அந்த அமைப்பு புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த திங்கள்கிழமை இந்த மருத்துவமனையின் ஒரு பகுதியில் குண்டு வீசப்பட்டுள்ளது. மறுநாள் குண்டுவீச்சு நின்ற பிறகு இந்திய செவிலியர்கள் மருத்துவமனையின் இரண்டாவது மாடியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கீழ்ப் பகுதியில் ஆயுதம் தாங்கிய போராளிகள் இருப்பதாக அந்த செவிலியர்கள் கூறியுள்ளனர். இப்பகுதிக்கு போர் நெருங்கி வரும் வரை இராக்கில் உள்ள இந்தியத் தூதரும், இராக்கிய அதிகாரிகளும், செஞ்சிலுவை சங்கத்தினரும் தங்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாக அவர்கள் கூறினர். ஆனால் இப்போது அவர்கள் யாரும் தொடர்பில் இல்லை என்பதால், செவிலியர்கள் அச்சத்தில் உள்ளனர்.
முன்பு நிலம் வழியாக பாதுகாப்பாக செல்ல முடியும் என்றால் அவர்களை இடம் மாற்றுவதாக தூதரக அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் இப்போது போர்ப் படையினர் வந்துவிட்டதால் என்ன ஆகும் என்று தெரியவில்லை. தாங்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பித்தால் போதும் என்று செவலியர்கள் கூறுகின்றனர்.
மொத்தமுள்ள 46 செவிலியர்களில் 36 பேர் இந்தியாவுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்றும், மற்றவர்கள் இந்தியாவில் வாங்கிய கடனை அடைப்பதற்கு இங்கு பணிபுரிய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் முன்பு கூறினர்.
இந்த மருத்துவமனையில் பிப்ரவரி மாதம் பணியில் சேர்ந்த 15 செவிலியர்களுக்கு இதுவரை ஊதியம் அளிக்கப்படவில்லை. இவர்களில் பலர், படிப்பை முடிப்பதற்கும், ஏஜெண்டுகளுக்கு கொடுப்பதற்கும் 13,000 அமெரிக்க டாலர்கள் வரை கடன் வாங்கியுள்ளனர். பிற வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குப் போவதென்றால் ஏஜெண்டுகளுக்கு அதிகப் பணம் கொடுக்க வேண்டும் என்பதால்தான் அவர்கள் இராக் வந்துள்ளனர். இந்திய மருத்துவமனைகளில் வெறும் 200 அமெரிக்க டாலர்கள் வரை ஊதியம் பெற்று இவ்வளவு பெரிய கடனை அடைப்பது அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.
இந்த செவிலியர்கள் படும் பாடு இந்தியாவில் இருந்து செல்லும் தொழிலாளர்களின் நிலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. எனவே, இந்திய அரசு சர்வதேச மனித உரிமை தரத்துக்கு ஈடான குடியேற்றச் சட்டத்தை வரையறுக்க வேண்டும். போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பினரும் சாதாரண மக்களை பாதிக்காமல் அவர்கள் பாதுகாப்புடன் வெளியேற ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.