Last Updated : 26 Oct, 2022 05:33 AM

 

Published : 26 Oct 2022 05:33 AM
Last Updated : 26 Oct 2022 05:33 AM

பிரதமரானது முதல் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடும் மோடி - கார்கிலில் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி நெகிழ்ச்சி

கார்கிலில் ராணுவ வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிய மோடி. படம்: பிடிஐ

புதுடெல்லி: கடந்த 2014-ல் பிரதமராக பதவி ஏற்றது முதல் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடி வருகிறார் நரேந்திர மோடி. அந்த வகையில் இந்த வருடமும் தீபாவளி நாளில் கார்கில் எல்லைக்கு சென்ற அவர், தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு இனிப்பு ஊட்டி நெகிழ்ந்தார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தஆண்டு தீபாவளி பண்டிகையின் கொண்டாட்டத்தை அயோத்தியிலிருந்து தொடங்கினார். அங்கு கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் தரிசனம் முடித்த அவர், அதன் தீப ஒளித் திருநாளை கண்டு மகிழ்ந்தார். கடந்த ஆண்டைவிட கூடுதலாக சுமார் 15.76 லட்சம் ஒளிவிளக்குகள் ஏற்றப்பட்டு உலகசாதனை படைக்கப்பட்டது. இதற்காக உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தோளில் தட்டிக்கொடுத்து பிரதமர் மோடி பாராட்டினார்.

இதையடுத்து அவர், கடந்த ஆண்டைப் போல ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாட வேண்டி கார்கில் பகுதிக்குச் சென்றார். நேற்று முன்தினம் அங்கு சிறப்பு விமானத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன் கார்கில்எல்லையின் பாதுகாப்பு முகாம்களுக்கு ராணுவ சீருடை அணிந்தபடி சென்றார் பிரதமர் மோடி. இதற்கு முன்னதாக கார்கிலில் 1999-ல் நடைபெற்ற போரில் உயிர்நீத்த வீரர்களின் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்தினார். கார்கிலில், ஒவ்வொரு பிராந்தியத்தைச் சேர்ந்த வீரர்கள் குழுவினராகப் பாடி மகிழ்ந்த தேசபக்தி பாடல்களின் இன்னிசையிலும் பிரதமர் மோடி குதுகலமாகக் கலந்து கொண்டார். இத்துடன் அவரும் வீரர்களுடன் இணைந்து பாடியதுடன் கைகளைத்தட்டி மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.

கார்கில் பாதுகாப்புப் படையில் உள்ள தமிழக வீரர்களும் குழுவாக கூடி நின்று பிரதமர் மோடியை வரவேற்று வணங்கினர். இவர்கள் அனைவரும் இணைந்து தமிழில் ‘சுராங்கனி! சுராங்கனிக்கா மாலுகன்னா..’ என்ற பாடலை உற்சாகமாகப் பாடினர். அப்போது பிரதமர் மோடி அவர்களுடன் இணைந்து தனது கைகளை கொட்டி ரசித்தார். தீபாவளிக்கான லட்டு இனிப்பை தனது கையால் அனைத்து தமிழக வீரர்களுக்கும் ஊட்டி நெகிழ்ந்தார். அப்போது அவர்களது ஊர், குடும்ப உறுப்பினர்களைப் பற்றியும் அன்பு கலந்த ஆர்வமுடன் பிரதமர் மோடி கேட்டு விசாரித்துள்ளார்.

இந்தியாவுக்கே தொடர் வெற்றி..

கார்கில் பாதுகாப்புப் படை வீரர்கள் முன்பு பிரதமர் மோடி பேசியதாவது: பல ஆண்டுகளாக எனது குடும்பம் என்பது நீங்கள் அனைவரும்தான். கார்கிலில் துணிச்சலான வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதை பெருமையாக கருதுகிறேன். நாட்டின் பாதுகாப்புக்கு தூணாக விளங்குவது படை வீரர்கள்தான். இந்த கார்கில் மண்ணில் பாகிஸ்தானுடன் நடந்த அனைத்து போரிலும் இந்தியாதான் வெற்றிக்கொடியை நாட்டி உள்ளது. பாகிஸ்தான் ஒருமுறை கூட வெற்றிபெறவில்லை இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x