

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹொசப் பேட்டை தொகுதியின் பாஜக எம்எல்ஏ ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சராக உள்ளார். அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதே தொகுதியில் ஆனந்த் சிங் களமிறங்க திட்ட மிட்டுள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு ஹொசப்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட நகராட்சி, கிராம பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசாக தங்க நாணயம், வெள்ளிப் பொருட்கள், ரூ.1 லட்சம் ரொக்கம், பட்டு வேட்டி, சட்டை, புடவை, உலர் பழங்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளார். இத்துடன் 26-ம் தேதி தனது இல்லத்தில் நடைபெறும் லட்சுமி பூஜை விருந்தில் பங்கேற்குமாறு சுமார் 200 கவுன்சிலர்களுக்கு அழைப்பிதழையும் அனுப்பியுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் நகராட்சி உறுப்பினர் ஒருவருக்கு ஆனந்த் சிங் அளித்த தீபாவளி பரிசு பெட்டகத்தில் ரூ.1 லட்சம் ரொக்கம், 144 கிராம் தங்க பிஸ்கட், 1 கிலோ வெள்ளி, பட்டுப்புடவை, பட்டு வேட்டி,சட்டை, உலர் பழங்கள் ஆகியவை இருந்தன. இதன் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.