

‘‘கறுப்புப் பணத்தை ஒழிக்க 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் ஒட்டுமொத்த நாடும் அரசுக்கு ஆதரவாக இருப்பதால் அமைச்சர்கள், எம்பிக்கள் அச்சப்படத் தேவையில்லை’’ என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாளை தொடங்கு கிறது. இந்த கூட்டத்தொடரின்போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்ப திட்டமிட்டுள்ளன. குறிப்பாக 500, 1,000 ரூபாய் நோட்டுகளை அரசு வாபஸ் பெற்றது, எல்லையில் நடத்தப் பட்ட துல்லியத் தாக்குதல், ஒரே பதவி; ஒரே ஓய்வூதியம் உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப முடிவு செய்துள்ளன. இதனால் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி ஆலோசனை
இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி களை சமாளிப்பது குறித்து பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் பாஜக தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மூத்த அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது கறுப்புப் பணத்துக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக் கைக்கு ஒட்டுமொத்த நாடே ஆதரவாக இருப்பதால், அமைச்சர்கள், எம்பிக்கள் அச்சப்பட தேவையில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு அமித் ஷா கூறியபோது,
‘‘பிரதமரின் துணிச் சலான நடவடிக்கைக்கு ஒட்டுமொத்த நாடும் ஆதரவாக உள்ளது. நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு உரிய பதில் அளிக்கும்’’ என்று தெரிவித்தார்.
ஓரணியில் எதிர்க்கட்சிகள்
இதற்கிடையே நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியை எதிர்கொள்வது தொடர்பாக காங்கிரஸ் தலைமையில் டெல்லியில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தரப்பில் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, திரிணமூல் காங்கிரஸ் தரப்பில் டெரிக் ஓ.பிரைன், இந்திய கம்யூனிஸ்ட் தரப்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் தரப்பில் சீதாராம் யெச்சூரி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.