ஏடிஎம் வரிசையில் மடியும் தேசபக்தர்கள்- பாஜகவை கலாய்த்துத் தள்ளும் சிவசேனா

ஏடிஎம் வரிசையில் மடியும் தேசபக்தர்கள்- பாஜகவை கலாய்த்துத் தள்ளும் சிவசேனா
Updated on
1 min read

'ரூபாய் நோட்டு உத்தியால் பலியானவர்கள் எண்ணிக்கை 40-ஐ எட்டியுள்ள நிலையில், நாட்டுக்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் தேசபக்தர்கள் என விமர்சிக்கும் பாஜகவின் போக்கு நீடித்தால் ஒருநாள் இந்த தேசத்தை தியாகிகள் பூமியாக பிரகடனப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்' என சிவசேனா மிகக் கடுமையாக பாஜகவை விமர்சித்துள்ளது.

உரி தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களையும் நோட்டு மாற்ற வரிசையில் நின்றவர்கள் சிலர் உயிரிழந்ததையும் ஒப்பிட்டு பேசியதால் பாஜகவின் அதிருப்திக்குள்ளான காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு சிவசேனா ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கத்தில், "உரி தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களையும் நோட்டு மாற்ற வரிசையில் நின்றவர்கள் சிலர் உயிரிழந்ததையும் ஒப்பிட்டு பேசியதால் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தல்வர் குலாம் நபி ஆசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது.

குலாம் நபி ஆசாத் மன்னிப்பு கேட்பதால் உண்மையை மாற்றிவிட முடியாது. உரி தாக்குதலுக்கும் நோட்டு நடவடிக்கைக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான் இருக்கிறது.

உரி தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான். அதில் நமது வீரர்கள் 20 பேர் உயிர் துறந்தனர். ரூ.500, 1000 செல்லாது என்ற நோட்டு நடவடிக்கை நமது ஆட்சியாளர்களால் நடத்தப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதலில் 'துணிச்சல்மிகு தேசபக்தர்கள்' 40 பேர் பலியாகினர்.

எதிர்காலத்தில், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை, வேலைவாய்ப்பின்மை போன்ற நெருக்கடிகளால் பலியானோர் எண்ணிக்கை 40-ல் இருந்து 40 லட்சம் ஆனால்கூட உயிரிழந்தவர்கள் அனைவரும் தேசபக்திக்கு இரையானவர்கள் என்றே இந்த அரசு பெருமை பேசும்.

நோட்டு உத்தியால் பலியானவர்கள் எண்ணிக்கை 40-ஐ எட்டியுள்ள நிலையில் நாட்டுக்காக வங்கிகள் முன் நீண்ட வரிசையில் 'தேசபக்தர்கள்' என விமர்சிக்கும் பாஜகவின் போக்கு நீடித்தால் ஒரு நாள் இந்த தேசத்தை தியாகிகள் பூமியாக பிரகடனப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரிதாகும் விரிசல்:

பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியே மத்திய அரசின் நோட்டு நடவடிக்கையைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது பாஜகவும் அரசியலில் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி நடத்தப்பட்ட பேரணிக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்து பேரணியில் பங்கேற்றது.

இதனையடுத்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ராஜ்நாத் சிங், கட்சி அதிருப்தியை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பாஜக - சிவசேனா விரிசல் விரிவடைவதாக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in