Published : 25 Oct 2022 03:56 PM
Last Updated : 25 Oct 2022 03:56 PM

காங்கிரஸுக்கு ‘கடினமான’ மாநிலங்கள் நோக்கி ராகுலின் ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ - ஜெய்ராம் ரமேஷ்

இந்திய ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை யாத்திரை இனி காங்கிரஸுக்கு மிகவும் கடினமான, அமைப்பு ரீதியாக பலம் குறைந்த மத்திய, வடஇந்திய மாநிலங்களில் பயணிக்க இருப்பதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செவ்வாய்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "கடந்த 48 நாட்களாக ராகுல் காந்தி நான்கு செய்தியாளர்கள் சந்திப்புகளை நடத்தியுள்ளார். இந்திய ஒற்றுமை யாத்திரை ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும்போது, இந்தச் சந்திப்புகள் நடத்தப்பட்டன. 5-வது செய்தியாளர்கள் சந்திப்பு அக்.31-ம் தேதி ஹைதராபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

அதேபோல கடந்த 48 நாட்களில், பல்வேறு துறைகளில் உள்ள சுமார் 50 வெவ்வேறு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ராகுல் காந்தியை சந்தித்துள்ளனர். அவர்கள் ராகுல் காந்தியிடம், விவசாயிகள் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, சிறு குறு நிறுனங்கள் மூடப்படுதல், பணவீக்கம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்டவைகள் குறித்த தங்களின் கவலையை தெரிவித்துள்ளனர்.

இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்து வந்த பாதையில் ராகுல் காந்தி இதுவரை 4 பேரணிகள், 35 சிறிய கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அமைதியான முறையில் நடந்த யாத்திரையின் மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. இதே அமைதியான முறையில் யாத்திரை திட்டமிடப்படி அடுத்தாண்டு பிப்ரவரி 20-ம் தேதி அல்லது அதற்கு முன்பாகவோ அதன் நிறைவு பகுதியான காஷ்மீரைச் சென்றடைந்து விடும்.

இந்திய ஒற்றுமை யாத்திரை அடுத்த 50 நாட்களுக்கு இனி காங்கிரஸுக்கு கடினமான மத்திய, வடக்கு மாநிலங்களுக்குள் பயணிக்க இருக்கிறது. கேரளா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களை ஒப்பிடுகையில் இனி செல்ல இருக்கும் மாநிலங்களில் காங்கிரஸின் அமைப்பு ரீதியிலான பலம் குறைவாகவே இருக்கிறது. காங்கிரஸுக்கு 2 சதவீதம் மட்டுமே வாக்கு வங்கி உள்ள ஆந்திரப் பிரதேசத்தில் யாத்திரையில் பங்கேற்ற மக்கள் கூட்டத்தை பார்க்கும் பொழுது, இனி யாத்திரை பயணிக்க இருக்கும் மாநிலங்களிலும் மக்களின் இந்த உற்சாகம் தொடரும் என்று நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

தீபாவளிக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை வியாழக்கிழமை (அக்.27) தெலங்கானா மாநிலம், மஹ்பூப் நகர் மாவட்டத்தில் இருந்து தொடங்க இருக்கிறது.

கடந்த செப். 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய இந்திய ஒற்றுமை யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசத்தை கடந்து தெலங்கானா வழியாக மகாராஷ்டிராவில் நுழைய இருக்கிறது. அங்கிருந்து இருந்து மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசமாநிலங்களுக்குள் பயணிக்க இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x