Published : 25 Oct 2022 09:03 AM
Last Updated : 25 Oct 2022 09:03 AM

தடையை மீறி பட்டாசு வெடித்த மக்கள்: டெல்லியில் காற்றின் தரம் கடும் சரிவு

டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு.

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் தடையை மீறி மக்கள் தீபாவளியன்று பட்டாசுகளை வெடித்ததால் காற்றின் தரம் மிகவும் குறைந்தது. இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது.டெல்லியின் குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் பகுதிகளில் காற்றின் தரம் மிக மோசமாக குறைந்தது.

காற்றின் தரத்தை அளக்கு அமைப்பானது, காற்றின் தரக் குறியீடு 50 என்றிருந்தால் அது நல்ல நிலைமை, 100 முதல் 101 என்றளவில் இருந்தால் திருப்திகரமான தரம், 101 முதல் 200 வரை இருந்தால் அது மிதமானது, 201 முதல் 300 வரை இருந்தால் அது மோசமான தரம், 301 முதல் 400 வரை இருந்தால் மிகவும் மோசமான தரம், 401 முதல் 500 என்றிருந்தால் அதிபயங்கர மோசம் என்று நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் இன்று காலை 6 மணி நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரம் 323 என்றளவில் இருந்தது.
இருப்பினும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்லியில் கடந்த 4 தீபாவளிகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு காற்றின் தரம் பரவாயில்லை என்றே கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. 2020ல் டெல்லியில் தீபாவளிக்குப் பிந்தைய காற்றின் தரம் 414 ஆகவும், 2019ல் 337 ஆகவும், 2018ல் 281 ஆகவும் இருந்தது.

டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடத்தி வருகிறது. தலை நகரில் காற்று மாசு அதிகரித்து வருவதால் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி வரை அனைத்து வகையான பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் ஆம் ஆத்மி அரசு தடை விதித்து உள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பாஜக எம்.பி. மனோஜ் திவாரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், “டெல்லியின் காற்று மாசு கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் பட்டாசு வெடிக்க எப்படி அனுமதி வழங்க முடியும்? மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்கட்டும். உங்களது பணத்தை இனிப்புகளை வாங்க செலவிடுங்கள்"என்று அறிவுரை கூறியது.ஆனாலும் தடையை மீறி மக்கள் பட்டாசுகளை அதிகளவில் வெடித்ததால் அங்கு காற்றின் தரம் மிக மோசமான அளவிற்கு சரிந்தது.

டெல்லி காற்று மாசுக்கு அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் ஏற்படும் புகையும் ஒரு முக்கியக் காரணியாக இருக்கிறது. தீபாவளி கொண்டாடப்படும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் தான் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் பயிர்க்கழிவுகள் எரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x