

கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கபினி அணை முழுகொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அதன் முக்கிய மதகுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.
சனிக்கிழமை அணையை பார்வையிட்ட கர்நாடக நீர்ப்பா சனத்துறை அதிகாரிகள், கரை யோர மக்கள் அச்சமடைய தேவையில்லை என தெரிவித் துள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாட்டை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் கபினி கடந்த வாரம் முழு கொள் ளளவை எட்டியது. அணையில் இருந்து அதிகளவில் நீர் வெளியேற் றப்பட்டது.
இந்நிலையில் நீர் வெளியேறும் 2,4,6 மற்றும் 7-வது மதகுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. மதகுகளின் அருகில் உள்ள அணையின் சுற்று சுவரிலும் விரிசல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் காட்டுத்தீயாக பரவியதால் மைசூர், மாண்டியா மாவட்ட மக்களும், கபினி கரையோரத்தில் அமைந்துள்ள நஞ்சன் கூடு, டி.நர்சிபுரா,சாம்ராஜ் நகர் மக்களும் பெரும் பீதி அடைந்துள்ளனர்.
அணையை முறையாக பராமரிப்பதில்லை
இது தொடர்பாக ஹெக்கடே தேவனக்கோட்டையை சேர்ந்த விவசாயி கரியப்பா கூறுகையில்,''அணையை பராமரிப்பதற்காக ஒதுக்கப்படும் பணத்தை அதிகாரிகள் கையாடல் செய்கின்றனர். முறை யான பராமரிப்பு பணிகள் நடை பெறாததாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் அணையில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. அணை ஆபத்தான கட்டத்தை எட்டிய பிறகும் நீர் தொடர்ந்து சேகரிக்கப்படுவதாலும் விரிசல் ஏற்பட்டிருக்கலாம்.
மேலும் அணையின் நீர்வரத் திற்கு ஏற்ப நீர் வெளியேற்றம் செய்யப்படுவதில்லை. அணை யின் உறுதித்தன்மையை ஆராயா மலும், மதகுகளின் நிலையை பரிசோதிக்காமலும் அதிக நீர் வெளியேற்றப்படுவதால் அணைக்கு பாதிப்பு ஏற்படுகிறது'' என்றார். இந்நிலையில் கபினி அணையின் கட்டமைப்பு பொறி யாளர் குழு மற்றும் வடிவமைப்பு குழுவி னர் விரிசல் அடைந்துள்ள மதகுகளை ஆராய்ந்தனர். பல இடங்களில் சுற்றுச்சுவர்களையும் பார்வையிட்டனர்.
இது குறித்து கபினி அணையின் மூத்த பொறியாளர் ரகுபதி கூறுகையில் “அணைக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. வடிவமைப்பு மற்றும் கட்டமைப்பு பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளனர். அணை பாதுகாப்பாகவும், உறுதியாகவும் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. அணை தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆதலால் மக்கள் அச்சமடைய தேவையில்லை'' என்றார். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு கபினி அணையில் இருந்து ஒரே நேரத்தில் அதிக நீர் திறக்கப்பட்டதால் டி.நர்சிப்புரா அருகேயுள்ள தரக்கா மதகு வெள்ளத்தில் சேதமடைந்தது.