Published : 22 Oct 2022 02:50 PM
Last Updated : 22 Oct 2022 02:50 PM

ரோஸ்கர் மேளா | வேலைவாய்ப்பு முகாம் தொடக்கம்; 75,000 பேருக்கு பணிநியமன ஆணை வழங்கினார் பிரதமர்

பிரதமர் மோடி

புதுடெல்லி: 10 லட்சம் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் இயக்கமான ரோஸ்கர் மேளா வேலைவாய்ப்பு முகாமை சனிக்கிழமை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக 75,000 பேருக்கு அரசுபணிகளுக்கான பணிநியமன ஆணையை பிரதமர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக இந்தியா உலகின் 5 மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியுள்ளது. மத்திய அரசு இளைஞர்களுக்கு அதிகபட்சமான வேலைவாய்ப்பினை உருவாக்குவதற்கு பல்வேறு வழிகளி்ல நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. உலக அளவில் சூழல் தற்போது சரியாக இல்லை. பல பெரிய பொருளாதார நாடுகளே திண்டாடி வருகின்றன. பல நாடுகளில் பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை அதன் உச்சத்தில் உள்ளது.

நூறாண்டுகளுக்கு ஒருமுறை மக்களை தாக்கும் தொற்றுநோய்களின் பாதிப்புகள் 100 நாட்களுக்குள் அகன்று விடாது. முழு உலகமும் இத்தகைய பிரச்சினையையும் அதன் பாதிப்புகளையும் சந்தித்து வருகின்றன. இந்தவேளையில், இந்த சிக்கல்களில் இருந்து நாட்டை பாதுகாக்க அரசு பல புதிய முன்னெடுப்புகளையும் சில கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தது. இந்த பாதிப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது ஒரு சவாலான வேலைதான் என்றால் மக்களின் ஆசீர்வாதத்தால் தற்போது வரை நாம் பாதுகாக்கப்பட்டு உள்ளோம். இவ்வாறு பிரதமர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு முன்னதாக, 75,000 பேருக்கு மின்னணு முறையில் வேலைக்கான பணிநியமன ஆணைகளை வழங்கினார். இதுகுறித்து ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசு செய்திக்குறிப்பில், "புதிதாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டவர்கள் நாடு முழுவதும் இருந்து தெரிவு செய்யப்பட்டு, மத்திய அரசின் 38 அமைச்சகங்கள், துறைகளில் பணியில் அமர்த்தப்படுவார்கள். இவர்கள் பிரிவு-ஏ, பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெற்றவர்கள்), பிரிவு-பி (அரசிதழ் பதிவு பெறாதவர்கள்), பிரிவு-சி என பல்வேறு நிலைகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

மத்திய ஆயுதப்படை காவலர்கள், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், கீழ்நிலை எழுத்தர்கள், சுருக்கெழுத்தர்கள், தனி உதவியாளர்கள், வருமான வரி ஆய்வாளர்கள் பலவகை பணி செய்வோர் (எம்டிஎஸ்) உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்களாக இந்த ஆணைகள் இருக்கும்

அமைச்சகங்கள் மற்றும் துறைகள் தாங்களாகவோ அல்லது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரயில்வே பணியாளர் நியமன வாரியம் போன்ற பணிநியமன முகமைகள் மூலம், இயக்கம் போல் இந்த பணி நியமனங்கள் நடைபெறுகின்றன. இதனை விரைவுப்படுத்த தெரிவு நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டிருப்பதோடு தொழில்நுட்ப ரீதியாகவும், நடத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னதாக, கடந்த ஜூன் மாதம், பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் அமைச்சகங்கள் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் பணியை ஒர் இயக்கம் போல செய்யவேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x