Published : 22 Oct 2022 12:32 PM
Last Updated : 22 Oct 2022 12:32 PM

'எல்லா நேரங்களிலும் இரண்டு பாதைகளில் பயணிக்க முடியாது' - நிதிஷுக்கு பிரசாந்த் கிஷோர் பதிலடி

பிரசாந்த் கிஷோர் | கோப்புப்படம்

பாட்னா: "நிதிஷ் குமார் ஜி உங்களுக்கு பாஜகவுடன் உறவு இல்லையென்றால், உங்கள் கட்சி (ஐக்கிய ஜனதாதளம்) எம்.பி.,யை ராஜ்யசபா துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்" என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

பிஹார் முதல்வராக இருந்து வரும் நிதிஷ் குமாருக்கும், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருக்கும் இடையே சமீபகாலமாக வார்த்தைப் போர் நீண்டுகொண்டே வருகிறது. இருவரும் பாஜகவுடனான அவர்களின் உறவு குறித்து ஒருவர் மீது மற்றவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பிஹார் மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் பிரசாந்த கிஷோர் தனது யாத்திரை முழுவதிலும் அம்மாநில முதல்வர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்தவகையில் புதன்கிழமை நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பிரசாந்த் கிஷோர், " எல்லோரும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியிருக்கும் நிதிஷ் குமார், அந்தக் கட்சிக்கு எதிராக தேசிய கட்சிகளை ஒன்றிணைக்க பாடுபட்டுக்கொண்டிருக்கிறார் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பாஜகவுக்கான வாசலை அவர் முழுவதுமாக மூடிவிடவில்லை. தன்னுடைய கட்சியின் எம்பியும் ராஜ்ய சபாவின் துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் மூலமாக பாஜகவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார். சூழல் எப்போது மாறுகிறதோ அப்போது அவர் மீண்டும் பாஜகவுடன் கைகோத்துக் கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றுவார்" என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதில் அளிக்கும் விதமாக வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், "பிரசாந்த் கிஷோர் விளம்பரத்திற்காக பேசுகிறார். அவர் இளையவர், என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் என்று தெரிவித்திருந்தார். மேலும், "எனக்கு ஒரு உதவி செய்யுங்கள். தயவுசெய்து அவரை (பிரசாந்த் கிஷோர்) பற்றி என்னிடம் கேட்காதீர்கள் என்று செய்தியாளர்களிடம் வேண்டுகோளும் விடுத்திருந்தார்.

நிதிஷ் குமாரின் இந்த கருத்துக்கு பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் அவர், "நிதிஷ் குமார் ஜி உங்களுக்கு பாஜக, தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்தவிதமான உறவும் இல்லை என்றால், உங்களின் எம்.பி.,யை அவருடைய ராஜ்ய சபா துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லுங்கள். எல்லா நேரங்களிலும் இரண்டு பாதைகளில் பயணிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர், ஐ-பேக் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளட்ட பல அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெற உறுதுணை புரிந்துள்ளார். பின்னர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய துணைத் தலைவராக அரசியலில் அடியெடுத்து வைத்தார். நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் 2020-ம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது, அக்.2 ஆம் தேதி முதல் பிஹார் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x