Published : 22 Oct 2022 10:49 AM
Last Updated : 22 Oct 2022 10:49 AM

இது என்ன வகையான கிரிக்கெட் காதல்? - இந்தியா - பாக்., போட்டி குறித்து ஒவைசி கேள்வி

அசாதுதீன் ஒவைசி

ஹைதராபாத்: "பாகிஸ்தான் சென்று விளையாடாத இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் மட்டும் ஏன் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும்" என்று ஹைதராபாத் எம்.பி.,யும், ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவருமான அசாதுதீன் ஒவைசி கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலங்கானா மாநிலம் விகரபாத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒவைசி கூறியதாவது: ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் போட்டியில் மட்டும் இந்திய கிரிக்கெட் அணி ஏன் பாகிஸ்தான் அணியுடன் விளையாட வேண்டும்?. நாங்கள் பாகிஸ்தானுக்குச் சென்று அந்த அணியுடன் விளையாட மாட்டோம். ஆனால் ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவோம் என்பது என்ன வகையான கிரிக்கெட் காதல்? வேண்டாம் அங்கேயும் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம். அப்படி விளையாடாமல் போனால் என்ன நடந்து விடும். தொலைக்காட்சிகளுக்கு ஒரு 2,000 கோடி நஷ்டம் ஏற்படும். இந்தியாவை விட அந்த நஷ்டம் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. நாளை அவர்களுடன் விளையாட வேண்டாம்.

நாளை நடக்க இருக்கும் போட்டியில் இரண்டு அணிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இந்திய அணி வெற்றி பெற வேண்டும். பாகிஸ்தான் அணிக்கு எதிராக எங்களது பிள்ளைகள், ஷமி, முகம்மது சிராஜ் நன்றாக விளையாடி பாகிஸ்தான் அணியை நிலைகுலைய வைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

ஆனால் இவர்கள் இந்திய அணி வெற்றி பெற்றால் மார்தட்டி கொண்டாடுவார்கள். மாறக இந்திய அணி தோல்வி அடைந்தால் யாருடை தவறால் இந்தியா தோல்வி அடைந்தது என்று காரணம் எனத் தேடத் தொடங்குவார்கள். இவர்களுடைய கிரிக்கெட் இதுதான். உங்களுடைய பிரச்சினைதான் என்ன? உங்களுக்கு எங்களுடைய ஹிஜாப், எங்களுடைய தாடிகளுடன் பிரச்சினை. அதே போல் எங்களுடைய கிரிக்கெட்டுடனும். இவ்வாறு ஒவைசி பேசினார்.

முன்னதாக, ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளருமான அஜய் ஷா, 2023 ஆசிய கோப்பைத் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு இந்திய அணி பயணம் மேற்கொள்ளாது என்று தெரிவித்திருந்தார். இந்தியாவில் நடைபெற இருக்கும் உலககோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்காது என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியானது.

இந்தநிலையில் ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தான் செல்லுமா என்பது குறித்து உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும் என்று மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்திருந்தார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்பு பற்றிய பேசிய அமைச்சர், உலகக்கோப்பை போட்டியில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

இந்தியா vs பாகிஸ்தான்: இதற்கிடையில் மெல்போர்னில் நடக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் - இந்தியா இடையே எந்த தனிப்பட்ட போட்டிகளும் நடக்காமல் உள்ளன. ஐசிசி சார்பாக நடக்கும் போட்டிகளில் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளை ரசிகர்கள் பார்க்க முடிவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x