Published : 22 Oct 2022 06:10 AM
Last Updated : 22 Oct 2022 06:10 AM
புதுடெல்லி: இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் படைப்பிரிவில் அடுத்தாண்டு ஒரு அணுசக்தி நீர்மூழ்கி கப்பலும், இரண்டு டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்களும் இணைக்கப்படவுள்ளன.
சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில் இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்கள் படைப்பிரிவு வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் சிந்துரத்னா நீர்மூழ்கி கப்பலில் கடந்த 2014-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்துக்குப்பின், அந்த கப்பல் பழுது பார்ப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும் ரஷ்யா அனுப்பப்பட்டது. அந்த கப்பல் அடுத்தாண்டு பிப்ரவரியில் மும்பை திரும்பி பணியில் ஈடுபடவுள்ளது. இது ரஷ்ய தயாரிப்பான கிலோ ரக நீர்மூழ்கி கப்பல். இந்த ரகத்தை சேர்ந்த 4 நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய கடற்படையில் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தலா ரூ.1,400 கோடி செலவில் மேம்படுத்தப்படவுள்ளன.
மேலும் ‘ப்ராஜக்ட்-75’ திட்டத்தின் கீழ் 6 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களை ரூ.23,000 கோடி செலவில் மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் உருவாக்க ஆர்டர் கொடுக்கப்பட்டிருந்தது. இவற்றில் 5-வது கப்பல் ஐஎன்எஸ் வகிர் என பெயரிடப்பட்டு அடுத்தாண்டு இணைக்கப்படவுள்ளது. 6-வது ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல் ஐஎன்எஸ் வக்ஸீர் என பெயரிடப்பட்டு 2024-ம் ஆண்டில் இணைக்கப்படவுள்ளது. எதிரி நாட்டு ரேடரில் சிக்காமல் செல்லும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் ஸ்கார்ப்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவைகள், மிக நீண்ட தூரம் சென்று தாக்கும் டார்பிடோ ஏவுகணைகள் மற்றும் போர்க்கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை ஏவும் திறன் படைத்தவை. இவற்றில் அதி நவீன சென்சார் மற்றும் சோனார் கருவிகளும் உள்ளன.
கடந்தாண்டு நவம்பர் மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்ட ஐஎன்ஸ் வேலா என்ற ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் வங்காள விரிகுடாவில் 8 மாதத்துக்கு மேல் ரோந்து பணியை வெற்றிகரமாக முடித்து கடந்த 15-ம் தேதி மும்பை திரும்பியது.
அணு ஏவுகணைகளை வீசும் திறன்படைத்த அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், ஐஎன்எஸ் அரிஹட் அடுத்த சில மாதங்களில் கடற்படையில் இணையவுள்ளது. இது 6,000 டன் எடை கொண்டது. ரூ.90,000 கோடி மதிப்பில் மேலும் இரண்டு அதி நவீன அணுசக்தி நீர் மூழ்கி கப்பல்கள் 7,000 டன் எடையில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
தற்போது இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் அரிஹந்த் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இவை 750 கி.மீ தூரம் சென்று தாக்கும் பி-05 மற்றும் கே-15 ரக குறுகிய தூர ஏவுகணைகளை மட்டுமே ஏவும் திறன் படைத்தது.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கி கப்பல் பிரிவில் 4 புதிய ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி கப்பல்களுடன், ரஷ்யாவின் 6 கிலோ ரக நீர்மூழ்கி கப்பல்கள், 4 ஜெர்மன் தயாரிப்பு எச்டிடபிள்யூ நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன.
சீனா மற்றும் பாகிஸ்தான் அச்சறுத்தலை எதிர்கொள்ள இந்திய கடற்படைக்கு குறைந்தது 18 டீசல் -எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்கள் 4, அணு ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல்கள் 6 ஆகியவை தேவை.
சீனா தனது கடற்படையின் பலத்தை அதிகரித்து வருகிறது. அதனிடம் ஏற்கனவே 50 டீசல்-எலக்ட்ரிக் நீர்மூழ்கி கப்பல்கள், 10 அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. மேலும், பாகிஸ்தானுக்கு 8 யுவான் ரக நீர்மூழ்கி கப்பல்களை சீனா வழங்கவுள்ளது. இது தண்ணீருக்குள் நீண்ட நேரம் இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டவை. இதனால், இந்திய கடற்படையும், தனது நீர்மூழ்கி கப்பல்களின் பலத்தை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளது. ரூ.42,000 கோடி மதிப்பில் 6 புதிய தலைமுறை நீர்மூழ்கி கப்பல்களை வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் திட்டம் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இத்திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
1000 கண்காணிப்பு ட்ரோன்கள்: இந்திய ராணுவத்துக்கு பல வகையான ட்ரோன்கள் வாங்கப்படுகின்றன. இந்நிலையில் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட ‘குவாட்காப்டர்’ எனப்படும் 1,000 ட்ரோன்களை கேமிராக்கள் மற்றும் தெர்மல் சென்சார்களுடன் வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இவற்றை உள்நாட்டில் வாங்க டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ட்ரோனும் 10 கிலோ எடைக்கு குறைவானதாகவும், 5 கி.மீ தூரம் பறக்கும் திறன் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும். இதற்கான ஒப்பந்தம் முடிந்த ஒரு ஆண்டுக்குள் இந்த ட்ரோன்கள் விநியோகிக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT