நோட்டு நடவடிக்கைக்கு முன்பாகவே பாஜகவினர் சொத்துகளை வாங்கி விட்டனர்: காங்கிரஸ் சாடல்

நோட்டு நடவடிக்கைக்கு முன்பாகவே பாஜகவினர் சொத்துகளை வாங்கி விட்டனர்: காங்கிரஸ் சாடல்
Updated on
1 min read

ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு முன்பாகவே பாஜக தலைவர்கள் பலர் தங்கள் கறுப்புப் பணத்தில் சொத்துக்களை வாங்கிக் குவித்துவிட்டனர் என்று காங்கிரஸ் கட்சியின் மல்லிகார்ஜுன் கார்கே சாடியுள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த கார்கே, “நோட்டு நடவடிக்கைக்கு முன்னதாகவே ‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு’ விஷயம் கசியவிடப்பட்டுள்ளது, இது பிரதமருக்கும் தெரியும். இதனால் அவரது கட்சி சகாக்கள் சில மாதங்களுக்கு முன்னரே கறுப்புப் பணத்தில் சொத்துகளை வாங்கிப் போட்டனர்.

இதுவே யார் உண்மையான கறுப்புப் பண ஆதரவாளர்கள் என்பதைக் காட்டுகிறது. ஜனநாயகத்தில் பிரதமருக்கு நம்பிக்கை இருக்குமானால் நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்க வேண்டும். கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும்.

மாறாக அவரோ தன்னை ஒரு சாமர்த்தியமான சாம்ராட்டாக நினைத்து கொண்டு வெளியே பேசுகிறார். இப்படியே அவர் பேசிக்கொண்டிருந்தால் அவதூறு மற்றும் உரிமை பிரச்சினையைச் சந்திக்க வேண்டிவரும்” என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுஜ்ரேவாலா கூறும்போது, “இந்த நோட்டு நடவடிக்கை மிகப்பெரிய ஊழலாகும்” என்றார். பிஹாரில் 3.41 கோடி ரூபாய்க்கு நிலங்களை வாங்கிப் போட்ட பாஜக-வினர் பட்டியல் உள்ளது. நோட்டு நடவடிக்கைக்கு முன்பாக பாஜக-வினரின் வங்கி டெபாசிட் தொகை பற்றிய விவரங்கள் உள்ளன. பாஜகவினர் நிலங்களை வாங்கிப்போட்டதன் ஆவணங்கள் உள்ளன.

“கறுப்புப் பணத்தை எதிர்த்துப் போராடுவதான மோடிஜீயின் முகமுடி கிழிந்தது. மக்களை எள்ளிநகையாடுவதை நிறுத்தி விட்டு அவர் தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளட்டும். பாஜகவினரின் வங்கிக்கணக்குகளை வெளியிட்டு, அவர்கள் இந்த ஓராண்டில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வெளிவந்தால் ரூபாய் நோட்டு நடவடிக்கையின் ஊழல் அம்பலமாகும். பாஜகவினரின் ஊழல்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவரத் தொடங்கியுள்ளன.

இது மிகப்பெரிய ஊழல், இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விவாதம் அவசியம்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in