

டெல்லி: இந்தியக் குடியரசுத் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்தவரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.
இந்தியக் குடியரசுத் தலைவராக தன்னை நியமிக்க வேண்டும் என்று கிஷோர் ஜெகநாத் சாவந்த் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நேரில் ஆஜரான மனுதாரர் கிஷோர் ஜெகநாத் சாவந்த் தான் ஒரு சமூக ஆர்வலர் என்றும் சமீபத்தில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் தான் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
விசாரணையின்போது அவரின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த மனு அற்பமானது என்றும், நீதிமன்றத்தின் செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வது என்றும் எச்சரித்தனர். ஒருகட்டத்தில் இந்த மனு இழிவானது என்றும் நீதிபதிகள் கடுமையாக சாடினார்.
தொடர்ந்து எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கிஷோர் ஜெகநாத் சாவந்த் மனுதாக்கல் செய்தால் அதை விசாரிக்க அனுமதிக்க கூடாது என்றும் அவர் கூறிய கருத்துக்களை பதிவேடுகளில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவும் பிறப்பித்தனர்.