Published : 21 Oct 2022 08:37 AM
Last Updated : 21 Oct 2022 08:37 AM

சுற்றுச்சூழலை பாதுகாக்க வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை: மிஷன் லைப் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

குஜராத்தின் கெவாடியாவில் நேற்று நடந்த ‘மிஷன் லைப்’ நிகழ்ச்சியை ஐ.நா.பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.படம்: பிடிஐ.

கெவாடியா

சுற்றுச்சூழலை பாதுகாக்க, நமது வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். குஜராத் மாநிலம் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை அருகே ‘மிஷன் லைப்’ என்ற இயக்கத்தை, ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடிநேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமாகத்தான், பருவநிலை மாற்றங்களை தடுக்க முடியும். பருவநிலை மாற்ற அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா உறுதியுடன் உள்ளது. குறைத்தல், மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி மற்றும் சுழற்சி பொருளாதாரம் ஆகியவை இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக பல ஆயிரம் ஆண்டுகளாக உள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் கூடிய வளர்ச்சிக்கு இந்தியா சிறந்த உதாரணமாக உள்ளது. எந்த ஒரு மாற்றத்தையும் ஒரு இயக்கமாக முன்னெடுப்பது மகாத்மா காந்தியின் வழிமுறையாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஒரு இயக்கமாக முன்னெடுக்க இந்த ‘மிஷன் லைப்’ நம்மை ஊக்குவிக்கிறது.

பருவநிலை மாற்றம், அரசுகள் மேற்கொள்ள வேண்டிய கொள்கைதொடர்பான விஷயம் மட்டும் அல்ல. பருவநிலை மாற்றத்தை எதிர்த்து போராட மக்களும் கூட்டுமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மின் கட்டணைத்தை குறைக்கஎல்இடி பல்புகள் பயன்படுத்தலாம். இதனால் பணத்தை மிச்சப்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதிப்பையும் குறைக்க முடியும்.

சிலர் ஏ.சி.யில் வெப்பநிலையை 17 டிகிரி அல்லது 18 டிகிரி செல்சியஸ் வைத்துவிட்டு, போர்வையை பயன்படுத்துகின்றனர். இந்த வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். சிலர் உடற்பயிற்சி கூடத்துக்கு செல்லும்போது, சுற்றுச்சூழலைகெடுக்கும் வாகனத்தில் செல்கின்றனர். இதை தவிர்த்து, சைக்கிளில் செல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் பேசும்போது, ‘‘பருவநிலை மாற்ற கடமைகளை நிறைவேற்ற வளர்ந்த நாடுகள், இந்தியா போன்ற நாடுகளுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அளிக்க வேண்டும்" என்றார்.

மேலும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் தலைவர் ஹபிஸ் தல்ஹாவை கருப்பு பட்டியலில் சேர்க்க வேண்டும் என இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து ஐ.நா.வில் விடுத்த கோரிக்கைக்கு சீனா தடையை ஏற்படுத்தியது. இந்நிலையில் தீவிரவாதத்தை எதிர்த்துபோராட உலகளாவிய ஒத்துழைப்பு தேவை என இந்நிகழ்ச்சியில் அந்தோனியோ குத்தேரஸ் அழைப்புவிடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x