

'அறிவியல் உலகளாவியதாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பமானது உள்ளூர் திறனாக இருக்க வேண்டும். எனவே இந்தியா - பிரிட்டன் வர்த்தக ஒத்துழைப்பில் 'மேக் இன் இந்தியா' முக்கிய பங்கு வகிக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே. ஐரோப்பாவுக்கு வெளியே அவர் மேற்கொள்ளும் முதல் சுற்றுப்பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் இன்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அறிவியல் தொழில்நுட்ப மாநாட்டில் பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே-யும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "கடந்த 5 ஆண்டுகளாக இந்தியா - பிரிட்டன் இடையேயான வர்த்தக உறவு வலுவாக இருக்கிறது. பிரிட்டனில் அதிகளவில் முதலீடு செய்துள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தில் இருக்கிறது. இருநாட்டு வர்த்தக ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதில் 'மேக் இன் இந்தியா' திட்டம் முக்கிய பங்கு வகிக்கும்.
அறிவியல் உலகளாவியதாக இருக்கலாம். ஆனால், தொழில்நுட்பமானது உள்ளூர் திறனாக இருக்க வேண்டும். அதற்காகவே 'மேக் இன் இந்தியா' வர்த்தக ஒத்துழைப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என வலியுறுத்துகிறோம்.
தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். 10 மில்லியன் பவுண்ட் மதிப்பில் இந்தியா - பிரிட்டன் கூட்டுறவில் சூழல்நட்பு எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் அமைக்கப்படும்" என்றார் மோடி.
அதைத் தொடர்ந்து பேசிய இங்கிலாந்து பிரதமர் தெரசா மே, "தடையற்ற வர்த்தகத்துக்கு சர்வதேச முன்னுதாரணமாக பிரிட்டன் திகழ வேண்டும் என்பதே எனது இலக்கு. அந்த வகையில் பிரிட்டனில் தொழில் முதலீடு செய்வதில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணப்படும்.
இனி வருங்காலங்களில் வர்த்தக தடைகளைத் தகர்த்து இந்தியாவுடனான வர்த்தக உறவு வலுப்படுத்தப்படும். ஐரோப்பாவுக்கு வெளியிலான பயணத்துக்கு நான் இந்தியாவை தேர்ந்தெடுத்ததற்கு முக்கியக் காரணம் இருநாடுகளுக்கு இடையே நிலவும் தனிச்சிறப்பான நல்லுறவே" என்றார் அவர்.