கன்னையா குமார் உட்பட 20 மாணவர்களுக்கு எதிராக நோட்டீஸ்: ஜேஎன்யூ பல்கலை நடவடிக்கை

கன்னையா குமார் உட்பட 20 மாணவர்களுக்கு எதிராக நோட்டீஸ்: ஜேஎன்யூ பல்கலை நடவடிக்கை
Updated on
1 min read

தேசத் துரோக வழக்கில் சிக்கியுள்ள கன்னையா குமார், உமர் காலித் உள்ளிட்ட 20 மாணவர்களுக்கு எதிராக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யூ) நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர் நஜீப் அகமது என்பவர் திடீரென மாயமானார். அவரை தேடும் நடவடிக்கையை முடுக்கிவிடாத பல்கலைக்கழகத்தை கண்டித்து கடந்த மாதம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது துணைவேந்தர் உட்பட முக்கிய அதிகாரிகளை 20 மணி நேரம் வரை பல்கலைக் கழகத்துக்குள் மாணவர்கள் சிறைப் பிடித்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஜேஎன்யூ நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நேற்று ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.

இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்கும்படி ஜேஎன்யூ மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், உமர் காலித் உட்பட 20 மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் நோட்டீஸ் பிறப்பித் துள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பல்கலைக் கழகத்தின் முதன்மை பாதுகாப்பு அதிகாரியிடம் இருந்து வந்த புகாரை அடுத்து மாணவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றார்.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவின்பேரில் டெல்லி போலீஸ் ஆணையர் அலோக் குமார் வர்மா, மாயமான மாணவரை தேடி கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தார். ஆனால், விசாரணையில் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே நஜீப் மாய மானதற்கு ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தான் காரணம் என்றும், அவர்கள் மீது எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கையும் பாயவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in