Last Updated : 26 Jul, 2014 09:04 AM

 

Published : 26 Jul 2014 09:04 AM
Last Updated : 26 Jul 2014 09:04 AM

புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பாஜக ஆலோசனை

தேசிய, மாநில அளவில் புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் பாஜக மூத்த தலைவர்கள் வியாழக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினர்.

டெல்லி துக்ளக் சாலையில் உள்ள மத்திய தரைவழிப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்தக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். தரப்பில் அதன் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இது பற்றி ‘தி இந்து’விடம் ஆர்.எஸ்.எஸ். வட்டாரங்கள் கூறியதாவது:

‘தேசிய தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்ட அமித் ஷா, கட்சியின் தேசிய நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்ய விரும்பினார். இதற்காக சில பொறுப்புகளுக்கு இளம் தலைவர்களின் பெயர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளன. சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் மகாராஷ்டிரம், ஜார்க் கண்ட், ஹரியாணா, டெல்லி மாநிலங் களின் கட்சி நிர்வாகத்தில் புதிய வர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

ஆலோசனைக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்ட நிர்வாகிகள் பட்டியலுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்து விட்டார். புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும்” இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக தலைவர் ஹெச்.ராஜா?

தமிழக பாஜக தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டு மத்திய இணை அமைச்சராகி உள்ளார். அவருக்குப் பதிலாக புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது. இதில் ஹெச்.ராஜாவை தமிழக பாஜக தலைவராக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

முடிவுக்கு வந்த இடைவெளி

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின்போது மத்திய அரசுக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தது. அந்த இடைவெளி இப்போது இல்லை என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு பிரதமர் விருந்து

இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி, இணைப் பொதுச் செயலாளர்கள் சுரேஷ் சோனி, தத்தாத்ரேயா ஹோஸ்பெல் மற்றும் கிருஷ்ண கோபால் ஆகியோருக்கு வியாழக்கிழமை இரவு விருந்து அளித்தார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றிபெற கடினமாக உழைத்த ஆர்.எஸ்.எஸ். தலைவர்களைப் பாராட்டி பிரதமர் இந்த விருந்தினை அளித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x