Published : 20 Oct 2022 11:04 AM
Last Updated : 20 Oct 2022 11:04 AM

'கார்கேவிடம் கேளுங்கள்' - ராகுல் காந்தியின் பேச்சுக்கு விளக்கம் அளித்த காங்கிரஸ்

ராகுல் காந்தி

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, ஆந்திர பிரதேசத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி 'கார்கேஜியிடம் கேளுங்கள்' என்று பேசியது குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்கு கடந்த 17-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன் வாக்குகள் எண்ணும் பணி புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணியில் நடைபெற்றது. இந்தநிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது ஆந்திரப் பிரதேசத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருக்கும் ராகுல் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ராகுலிடம் காங்கிரஸ் கட்சியில் அவரது பங்களிப்பு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியில் எனது பங்களிப்பு குறித்து புதிய தலைவரே முடிவு செய்வார். அதை கார்கேஜியிடம், சோனியாஜியிடம் கேளுங்கள்" என்று பதில் அளித்திருந்தார்.

அதிகாரபூர்வமாக தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தலைவர் யார் என்பதை தெரிவிப்பது போல அமைந்த ராகுலின் இந்த பேச்சிற்கு காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து புதன்கிழமை மாலை கருத்து தெரிவித்த அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், "செய்தியாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கேவின் பெயரை அறிவிக்கவில்லை. அவர் செய்தியாளர்களை சந்திக்கும் போது வாக்கு எண்ணிக்கையின் போக்கில் யார் வெற்றி பெறுவர்கள் என்பது தெளிவாகியிருந்தது என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், "அதோனியில் மதியம் 1 மணியளவில் நடந்த ராகுல் காந்தியின் செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கேவின் பெயரை அறிவித்தார் என்று பல தவறான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அந்த செய்தியாளர்கள் சந்திப்பு தொடங்குவதற்கு முன்பே, வாக்கு எண்ணிக்கையின் போக்குகள் தெளிவாக உண்மையை உணர்த்தி விட்டன" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆந்திராவில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி புதன்கிழமை மதியம் 1 மணிக்கு அதோனியில் செய்தியார்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பற்றிய சசி தரூரின் குற்றச்சாட்டு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி" அந்த குற்றச்சாட்டுகள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையத் தலைவர் மதுசூதன மிஸ்த்ரி கவனித்துக் கொள்வார். காங்கிரஸ் கட்சி அதன் உள்கட்சி தேர்தல் பொறுப்புக்கு முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் போன்ற ஒரு நபரை நியமித்திருக்கிறது" என்றார்.

தொடர்ந்து அவரிடம், கட்சியில் இனி அவரின் பங்களிப்பு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி," எனது பங்களிப்பை பற்றி நான் தெளிவாக இருக்கிறேன். நான் எப்படி பயன்படுத்தப்பட வேண்டும் கட்சியில் எனது பங்களிப்பு என்ன என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவரே தீர்மானிப்பார். இதை நீங்கள் கார்கே ஜியிடம் சோனியா ஜிடம் கேட்க வேண்டும்.

காங்கிரஸில் கட்சியின் தலைவரே இறுதி அதிகாரம் படைத்தவர். எங்களுக்கு புதிய தலைவர் கிடைத்திருக்கிறார். கட்சி இனி எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று அவரே தீர்மானிப்பார்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் தேர்தல்குறித்து புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்த பாஜக, புதன்கிழமை காலையில் இருந்தே கார்கே பெயர் கொண்ட போஸ்டர்கள் தயாராக இருந்தன. சோனியாகாந்திக்கு எதிராக தலைவர் பதவிக்கு ஜித்தேந்திர பிரசாத் போட்டியிட்ட போது அந்த தேர்தல் எப்படி முன்தீர்மானிக்கப்பட்டதாக இருந்தது என்று அவர் கூறியதைப் போலவே இன்றும் நடந்துள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடந்தது பற்றி டாக்டர் சசி தரூர் ஏற்கெனவே தெரிவித்துள்ளார் என்று விமர்சித்திருந்து.

24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் போட்டியிட்டனர். கடந்த 17-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், வாக்களிக்கத் தகுதி பெற்ற 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரில் 96 சதவீதத்தினர் வாக்களித்தனர். புதன்கிழமை காலை வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே 7,897 வாக்குகளும், சசிதரூர் 1,072 வாக்குகளும் பெற்றனர். 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதையடுத்து, கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவை, காங்கிரஸ் தேர்தல் ஆணையத்தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி அறிவித்தார். கார்கே வரும் 26-ம் தேதி பொறுப்பேற்க உள்ளதாக ரன்தீப் சுர்ஜேவாலா எம்.பி. அறிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x