மகளுக்கு ரூ.650 கோடியில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜனார்த்தன ரெட்டி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை

மகளுக்கு ரூ.650 கோடியில் ஆடம்பரமாக திருமணம் செய்த ஜனார்த்தன ரெட்டி வீடுகளில் வருமான வரித்துறை சோதனை
Updated on
2 min read

முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக வருமான வரித்துறை தகவல்

தனது மகளுக்கு ரூ.650 கோடியில் ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்த கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர்.

பெல்லாரி ரெட்டி சகோதரர் களில் ஒருவரும், பிரபல சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி, கடந்த 2011-ம் ஆண்டு கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்தது தொடர்பான 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிக்கி கைதானார். இதையடுத்து இவரது வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

சட்ட விரோதமாக சுரங்கம் அமைத்து ரூ.50 ஆயிரம் கோடி வரை கனிம வளங்களை ஏற்றுமதி செய்ததாக சிபிஐ வழக்கு நடத்தி வருகிறது. 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த ஜனார்த்தன ரெட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி தனது மகள் பிராமணிக்கு ஆடம்பரமாக‌ திருமணம் செய்தது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெங்களூருவை சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான நரசிம்ம மூர்த்தி கர்நாடக வருமான வரித்துறை இயக்குநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், “நாட்டில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்துள்ளதால் ஏழை எளிய மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

ஆனால் ஜனார்த்தன ரெட்டி தனது மகளுக்கு ரூ.650 கோடிக்கும் அதிகமாக செலவு செய்து ஆடம்பரமாக திருமணத்தை நடத் தியுள்ளார். அவருக்கு இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? அவரது வருமானத்துக்கான ஆதாரம் என்ன? இதுகுறித்து வருமான வரித்துறை உரிய விசாரணை நடத்த வேண்டும்” என கோரி இருந்தார்.

இதையடுத்து, ஹூப்ளியில் உள்ள வருமான வரித்துறை சிறப்பு அதிகாரி கவுசல்யா குமார் தலைமையில் 10 அதிகாரிகள் திங்கள்கிழமை பெல்லாரியில் உள்ள ஜனார்த்தன ரெட்டியின் அலுவல கங்கள் மற்றும் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது ரெட்டி சகோதரர்களுக்கு சொந்த மான சுரங்க நிறுவனங்களின் ஆவணங்கள், ஆந்திராவில் உள்ள ஒபலாப்புரம் சுரங்க நிறுவ‌னத்தின் முக்கிய ஆவணங்கள் சிக்கின.

மேலும் அவரது மகள் பிராமணியின் திருமண புகைப் படங்கள், வீடியோ ஆதாரங்கள், திருமணத்துக்காக வாங்கப்பட்ட தங்க, வைர நகைகளின் ரசீதுகள் உள்ளிட்டவை சிக்கின. ஜனார்த்தன ரெட்டியின் சுரங்க நிறுவன அலுவலகங்களில் சுரங்க அனுமதி கடிதம், ஏற்றுமதி செய்யப்பட்ட கனிமங்கள், அவற்றுக்கான வருமானம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

24-ம் தேதிக்குள் பதில் அளிக்க நோட்டீஸ்

வருமான வரித்துறை அதிகாரிகள் ஜனார்த்தன ரெட்டிக்கு 3 பக்கங்கள் கொண்ட நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அதில் “வரும் 24-ம் தேதிக்குள் மகளின் திருமணம் தொடர்பான அனைத்து கணக்கு வழக்குகளையும் தாக்கல் செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது. மேலும் திருமண செலவு தொடர்பாக 16 கேள்விகளை அனுப்பி அதற்கு உரிய ஆதாரங்களுடன் பதில் அளிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திருமண சேவை வழங்கியவர்களுக்காக வழங்கப்பட்ட காசோலை, டெபிட் மற்றும் கிரடிட் கார்டு பயன்பாடு மற்றும் ரொக்கப் பணம் கொடுத்தது ஆகிய விவரங்களையும் கேட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in