Published : 19 Oct 2022 10:39 AM
Last Updated : 19 Oct 2022 10:39 AM

'மகளை பத்திரமாக பார்த்துக்கொள்' - கேதார்நாத் விபத்தில் பலியான பைலட்டின் கடைசி உரையாடல்

கேதார்நாத் அருகே நடந்த விபத்தில் நொறுங்கிய ஹெலிகாப்டர்

மும்பை: "மகளுக்கு உடல்நிலை சரியில்லை அவளை பத்திரமாக பார்த்துக்கொள்" என்று கேதார்நாத் ஹெலிகாப்டர் விபத்தில் பலியான பைலட் தன் மனைவியிடம் கடைசியாக பேசும்போது தெரிவித்துள்ளார்.

அனில் சிங் (57) பைலட்டான இவர் மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அந்தேரியின் புறநகர் பகுதியில் வீட்டுவசதி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார். இவருக்கு ஷீரின் அனந்திதா என்ற மனைவியும், ஃபேரோஸா சிங் என்ற மகளும் இருக்கின்றனர்.

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் கோயில் வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து, தரிசனம் முடித்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு, பெல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் செவ்வாய்கிழமை காலை 11.25 மணிக்கு குப்தகாசிக்கு புறப்பட்டது. ஹெலிகாப்டரை அனில் சிங் இயக்கினார். மோசமான வானிலை காரணமாக இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் அனில் சிங் உட்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில் அனில் சிங்கின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக அவரது மனைவி அனந்திதா, மகள் ஃபேரோஸா சிங் டெல்லிக்கு செல்கின்றனர். டெல்லி ஷாகத்ரா பகுதியைச் சேர்ந்த அனில் சிங் கடந்த 15 ஆண்டுகளாக வசித்துவந்தார். அவரது மனைவி திரைத்துறையில் எழுத்தாளராக உள்ளார்.

விபத்து குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய அனந்திதா கூறுகையில், "கடைசியாக நேற்று (திங்கள்கிழமை) அவர் என்னிடம் பேசினார். எங்கள் மகளுக்கு உடல்நிலை சரியில்லை. மகளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று என்னிடம் தெரிவித்தார். மலைப்பகுதியில் கால நிலை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது என்று அவர் என்னிடம் கூறியிருக்கிறார். இது ஒரு விபத்து, இதற்காக நான் யாரையும் குறைசொல்லவும் இல்லை யார் மீதும் புகார் அளிக்க போவதுமில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிகாப்டர் விபத்து: உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், பைலட் உட்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தனர்.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் குகைக்கோயில் பனிக்காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடை காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரை 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. சாலை மார்க்கமாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல முடியாது. கவுரிகண்ட் என்ற இடத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் மலையேறி செல்ல வேண்டும். முதியோருக்காக குதிரை சவாரி சேவை உள்ளது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களையும் இயக்குகின்றன.

இந்நிலையில், கேதார்நாத் கோயில் வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து, தரிசனம் முடித்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு, பெல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேற்று காலை 11.25 மணிக்கு குப்தகாசிக்கு புறப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த பைலட் அனில் சிங் ஹெலிகாப்டரை இயக்கினார்.

சென்னையை சேர்ந்த பிரேம்குமார் (63), சுஜாதா (56), கலா (60), குஜராத்தை சேர்ந்த பூர்வா (26), உர்வி (25), கீர்த்தி (30) ஆகிய 6 பக்தர்கள் அதில் இருந்தனர். புறப்பட்ட 15 நிமிடங்களில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் மற்றும் 6 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல்வர் புஷ்கர் தாமி உத்தரவின்பேரில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது என்று உத்தராகண்ட் மாநில விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி ரவிசங்கர் கூறினார்.

‘‘காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. மலைச்சரிவில் ஹெலிகாப்டர் மோதிய சத்தம், பல கி.மீ. தூரம் வரைகேட்டது. நாங்கள் ஓடிவந்து பார்த்தபோது, இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. பக்தர்களின் உடல்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன’’ என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்திருந்தனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x