

புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட (யுஎன்டிபி) அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளில் (2005-06 முதல் 2019-2021 வரையில்) பல பரிமாண வறுமை நிலைகளில் இருந்து 41.5 கோடிபேர் மீண்டுள்ளனர். அதன்படி, வறுமைக்கான குறியீடு 55.1 சதவீதத்திலிருந்து 16.4 சதவீதமாகக் குறைந்துள்ளது என நடப்பாண்டுக்கான உலகளாவிய பல பரிமாண வறுமைக் குறியீடு தெரிவித்துள்ளது.
வறுமையின் பிடியிலிருந்து கோடிக்கணக்கானோர் மீண்டுள்ளது மிகப்பெரிய ஆதாயம் மற்றும் வரலாற்று மாற்றமாகும். இருந்தபோதிலும், 2020-ம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவில் 22.89 கோடி ஏழைகள் உள்ளனர். உலகஅளவில் பார்க்கும்போது இந்தியாவில் ஏழைகளின் எண்ணிக்கை மிகப்பெரும் அளவில் உள்ளது. இதனால், ஏராளமான சவால்களும் தொடர்கதையாகி வருகிறது.
வறுமைக் குறைப்பில் கோவா அதிக வேகம் காட்டி வருகிறது. அதனைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர், ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் உள்ளன.
2015-16 கணக்கீட்டின்படி அதிக ஏழைகளைக் கொண்ட பிரிவில் 10 மாநிலங்கள் இடம்பெற்றிருந்தன. 2019-2021-ல் இந்தப் பிரிவில் இருந்து வெளியேறிய ஒரே மாநிலமாக மேற்கு வங்கம் உள்ளது. எஞ்சியுள்ள பிஹார், ஜார்க்கண்ட், மேகாலயா, ம.பி., உ.பி., அசாம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்கள் அந்தப் பட்டியலில் தொடர்கின்றன. இவ்வாறு யுஎன்டிபி தெரிவித்துள்ளது.