Published : 19 Oct 2022 04:48 AM
Last Updated : 19 Oct 2022 04:48 AM

கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி 3 தமிழர் உட்பட 6 பக்தர்கள் உயிரிழப்பு - தலைவர்கள் இரங்கல்

டேராடூன்: உத்தராகண்டின் கேதார்நாத் கோயில் அருகே ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர், பைலட் உட்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தனர். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் குகைக்கோயில் பனிக்காலத்தில் மூடப்பட்டிருக்கும். கோடை காலமான மே மாதம் முதல் அக்டோபர் வரை 6 மாதங்கள் மட்டுமே திறந்திருக்கும். இந்த ஆண்டுக்கான யாத்திரை கடந்த மே 3-ம் தேதி தொடங்கியது. சாலை மார்க்கமாக கேதார்நாத் கோயிலுக்கு செல்ல முடியாது. கவுரிகண்ட் என்ற இடத்தில் இருந்து 22 கி.மீ. தொலைவுக்கு பக்தர்கள் மலையேறி செல்ல வேண்டும். முதியோருக்காக குதிரை சவாரி சேவை உள்ளது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களையும் இயக்குகின்றன.

இந்நிலையில், கேதார்நாத் கோயில் வளாகத்தில் உள்ள ஹெலிபேடில் இருந்து, தரிசனம் முடித்த பக்தர்களை ஏற்றிக்கொண்டு, பெல் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் நேற்று காலை 11.25 மணிக்கு குப்தகாசிக்கு புறப்பட்டது. மகாராஷ்டிராவை சேர்ந்த பைலட் அனில் சிங் ஹெலிகாப்டரை இயக்கினார்.

சென்னையை சேர்ந்த பிரேம்குமார் (63), சுஜாதா (56), கலா (60), குஜராத்தை சேர்ந்த பூர்வா (26), உர்வி (25), கீர்த்தி (30) ஆகிய 6 பக்தர்கள் அதில் இருந்தனர். புறப்பட்ட 15 நிமிடங்களில் ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் பைலட் மற்றும் 6 பக்தர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதல்வர் புஷ்கர் தாமி உத்தரவின்பேரில் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகமும் விசாரணை நடத்தி வருகிறது என்று உத்தராகண்ட் மாநில விமானப் போக்குவரத்து மேம்பாட்டு ஆணைய தலைமை செயல் அதிகாரி ரவிசங்கர் கூறினார்.

‘‘காலை முதலே வானம் மேகமூட்டமாக இருந்தது. மலைச்சரிவில் ஹெலிகாப்டர் மோதிய சத்தம், பல கி.மீ. தூரம் வரைகேட்டது. நாங்கள் ஓடிவந்து பார்த்தபோது, இன்ஜின் உள்ளிட்ட பாகங்கள் தீப்பிடித்து எரிந்துகொண்டு இருந்தன. ஹெலிகாப்டரின் பாகங்கள் சிதறிக் கிடந்தன. பக்தர்களின் உடல்கள் ஆங்காங்கே வீசப்பட்டிருந்தன’’ என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விபத்தில் 7 பேர் உயிரிழந்ததற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குதிரை சவாரியால் தப்பிய தமிழர்

சென்னை முகப்பேர் சாந்தம் காலனி 9-வது தெருவை சேர்ந்த தம்பதியர் பிரேம்குமார் - சுஜாதா. இவர்களது உறவினர் மயிலாப்பூர் பாலகிருஷ்ணா தெருவை சேர்ந்த கலா. இவர்கள் கடந்த 12-ம் தேதி பெங்களூருவை சேர்ந்த தனியார்சுற்றுலா நிறுவனம் மூலம் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்று,அங்கிருந்து கேதார்நாத்துக்கு யாத்திரை சென்றுள்ளனர். நேற்று நடந்த விபத்தில் இவர்கள் 3 பேரும் உயிரிழந்துவிட்டனர். கலாவின் கணவர் ரமேஷும் உடன் சென்றிருந்தார். அவர் குதிரை சவாரி மூலம் திரும்புவதாக கூறியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. 3 பேரின் உடல்களும் டேராடூன் கொண்டு செல்லப்பட்டுள்ளன. உடலைப் பெறுவதற்கு குடும்பத்தினர் டேராடூன் சென்றுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘தமிழகத்தை சேர்ந்தபிரேம்குமார் வாஞ்சிநாதன், சுஜாதா பிரேம்குமார், கலா ரமேஷ் ஆகிய மூவரும் கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு புனித யாத்திரை சென்றனர். அப்போது, ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தனர் என்ற செய்தி கேட்டு வருத்தமும், வேதனையும் அடைந்தேன். அவர்களது உடல்களை சென்னைக்கு விரைவாக கொண்டுவருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை உத்தரகாண்ட் அரசுடன் இணைந்து தமிழக அரசு எடுத்து வருகிறது’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x